நெசவாளர்கள் வங்கியில் வாங்கிய கடன் ஒரு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் - முதலமைச்சர்

0 2739
நெசவாளர்கள் வங்கியில் வாங்கிய கடன் ஒரு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெசவாளர்கள் வங்கியில் வாங்கிய கடன் ஒரு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் வழிபாடு நடத்திய பின் முதலமைச்சர் பிரச்சாரத்தை தொடங்கினார்.அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் நங்கவள்ளியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், எடப்பாடி தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். இப்போது 1100 எண்ணுக்கு போன் செய்து பிரச்சனைகளைக் கூறினால் உடனே தீர்த்து வைக்கப்படும் என்றும் மனு தரவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நெசவாளர் நல வாரியம் அமைத்து தரப்படும் என்றும், கைத்தறிக்கு ஜிஎஸ்டி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

17 ஆயிரத்து 668 கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான பணிகள் துவங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சியில் பரப்புரை மேற்கொண்ட பழனிசாமி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு வெற்றி பெறாத ஒரே கட்சி திமுக என்றார். திமுக. வாரிசு அரசியல் செய்து வருகிறது என்றும் சாடினார்.

அதிமுக ஆட்சியில் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி உள்ளதாக பெருமிதத்துடன் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments