முதலமைச்சர், துணை முதலமைச்சர், மு.க.ஸ்டாலினின் சொத்து விவரம் வெளியீடு..!

0 6796
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்தாக வங்கி கணக்குகளில் 47 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டடோரின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன.

வேட்பு மனுவின் போது தாக்கல் செய்யப்படும் உறுதிமொழிப் பத்திரத்தின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியின் அசையும் சொத்தாக 47 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயும், அசையா சொத்தாக ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி ராதா பெயரில் அசையும் சொத்தாக ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயும், அசையா சொத்து மதிப்பு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ், தனக்கு 4 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து 488 ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் 10 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்து 858 ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்தாக 2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் பெயரில் 21 கோடியே 13 லட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உதயநிதியின் மனைவி கிருத்திகா பெயரில் ஒரு கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய், அவரது மனைவி கிருத்திகாவின் வருமானம் 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். பொதுமக்களுக்கான போராட்டங்களின் போது சட்டங்களை மீறியதாகப் பல்வேறு காவல்நிலையங்களில் உதயநிதி மீது 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் அசையும் சொத்து மதிப்பு 45 கோடியே 9 லட்சம் ரூபாயாகவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 131 கோடியே 84 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. 49 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், தனக்கு மொத்தம் 159 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனு தாக்கலின் போது அளித்த உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். வங்கி கணக்கில் உள்ள பணம், பரஸ்பர நிதி, சொகுசு கார்கள் உள்ளிட்ட 12 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், விவசாய நிலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட 147 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 7 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கடன் பொறுப்புகள் இருப்பதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கு அசையும் சொத்துக்களாக 35 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும், மனைவி பெயரில் 52 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சொத்துக்களும் இருப்தாக குறிப்பிட்டுள்ளார். அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தனக்கு ரூபாய் 1000 வருமானம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments