எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்துப் பிரிவினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் ஓரணியாகப் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். ஏற்கெனவே 1989, 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏழாவது முறையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி தனலிங்கம் வேட்பு மனுவைப் பெற்றுக்கொண்டார்.
வேட்பு மனுதாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு அனைத்துப் பிரிவினரும் வரவேற்புத் தெரிவித்துள்ளதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த அணி என்றும் தெரிவித்தார்.
முன்னதாக எடப்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Comments