கூவம் ஆற்று சகதியில் சிக்கி தவித்த பெண்... உயிரைப் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர்!

0 4101
கூவம் ஆற்றில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் புகழேந்தி

நள்ளிரவு நேரத்தில் அடையாறு ஆற்று சகதியில் சிக்கி தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சைதாப்பேட்டை காவல் ஆய்வாளாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி.  இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி அவர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 13ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பனகல் மாளிகை வழியாக செல்லும் கூவம் ஆற்றில் ஏதோ ஒரு உருவம் அசைவதாக தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ஆற்றின் சகதியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரின் உடல் முழுவதும் சகதியில் மாட்டிக்கொண்டு மூச்சு விடமுடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட காவல் ஆய்வாளர் புகழேந்தி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். யார் சென்றாலும் மாட்டிக் கொள்வோம் என்ற நிலையில் தீயணைப்பு துறையினருக்காக காத்திருக்காமல் கரையோரம் கிடந்த ஆஸ்பெட்டாஸ் ஓடு மற்றும் மரக்கட்டைகளை ஆற்றில் எட்டும் தொலைவிற்கு விசினார். பின்னர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், அதன் மீது நடந்து சென்று ஆற்றில் மாட்டிகொண்டு தவித்த அந்த பெண்மணியை மீட்டுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை விசாரணை செய்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், தன்னிலை அறியாமல் நடந்து வந்ததில் ஆற்றில் மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது. பின்னர் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து விசாரணை செய்ததில், அவர் கிண்டியில் உள்ள நாகிரெட்டியாபட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் தாய் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்த போலீசார், அவர் குடும்பத்தாரிடம் தாயை ஒப்படைத்தனர்.  தாயை தக்க சமயத்தில் காப்பாற்றி மீட்டு கொடுத்த காவல் துறையினருக்கு அப்பெண்மணியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

நள்ளிரவு நேரத்திலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தாமாக முன்வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்ட செய்தியறிந்த அடையாறு துணை ஆணையாளர் விக்ரமன் ஐபிஎஸ் மற்றும் காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் புகழேந்தியை வெகுவாகப் பாராட்டினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments