முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல்..!

0 1918
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இன்றே மனுத்தாக்கல் செய்யவிருக்கின்றனர்.

ஏப்ரல் 6ந் தேதி தமிழக தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர்களின் பெயர்களை அந்தந்தக் கட்சிகள் அறிவித்துவிட்டன. 19ந் தேதியுடன் மனுத்தாக்கல் முடிவடையும் நிலையில், வேட்பாளர்கள் இன்றே வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவில் முன்பு இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர், நங்கவள்ளி, வனவாசி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்துவிட்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு அளிக்கிறார். அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். முக்கிய நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று பகல் 12.30 மணி அளவில் அயனாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அவர் வேட்புமனுவை அளிக்கிறார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

உடனடியாக திருவாரூர் புறப்பட்டுச் செல்லும் மு.க.ஸ்டாலின், தெற்கு ரத வீதியில் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மன்னார்குடி, நன்னிலம் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் அந்தந்த தொகுதிகளில் ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை அளிக்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், கோவையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நல்லநாள் என கருதப்படுவதால் ஏராளமான வேட்பாளர்கள் இன்றே மனுதாக்கல் செய்ய உள்ளனர். இதனால் தேர்தல் அலுவலகத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு, வேட்பாளர்கள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments