களைகட்டத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்..! அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

0 2193
களைகட்டத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்..! அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், திமுக அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

ரு கட்சி பணத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் எந்த மாதிரியான முடிவு வரும் என்பது இந்த தேர்தலில் தெரியவரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடவிருக்கும் தினகரன், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசினார். கோவில்பட்டியில் நாளை பிற்பகல் வேட்புமனுத்தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகக் அப்போது அவர் கூறினார்.

திருவள்ளூர் தொகுதியில் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டார். பாகசாலை, சினிமா பேட்டை, திருவலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

கரூரை மாநகராட்சியாக உயர்த்த பாடுபடுவேன் என அங்கு திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இன்று 2வது நாளாக வீடு வீடாகச் சென்று பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த செந்தில்பாலாஜியை அவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெரு, பூசாரி கவுண்டர் தெரு, திட்டசாலை, செல்வ நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைகைச் செல்வனின் பிரச்சாரக் கூட்டத்தில் முதியவர் ஒருவரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் பிரச்சாரத்தைத் தொடங்கிய வைகைச் செல்வனுக்கு தொண்டர்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர், அங்கு ஏற்கனவே எம்.எல்.ஏவாக பதவியிலிருந்தபோது வைகைச் செல்வன் என்ன செய்தார் எனக் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்க முயன்றனர்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்கா விரைவாக செயல்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வாகாப் தெரிவித்தார். நெல்லை மாவட்ட மத்திய அலுவலகத்தில் நெல்லை தொகுதி வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனுடன் செய்தியாளர்களை சந்தித்த அப்துல்வாகாப் இதனைத் தெரிவித்தார். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்பில் மானூர், பள்ளமடை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. இத்தொகுதிக்குட்பட்ட சிவந்திபுரம் பகுதி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அகஸ்தியர்பட்டியில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்த வந்தவர்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு  ஆதரவு திரட்டினார்‍. 

சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும்  ஆர்.எஸ். ராஜேஷ் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை கிறிஸ்துவ தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்த அவர், இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றும், வீடு வீடாகச் சென்றும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍.

திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும் என விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் வந்த தங்கம் தென்னரசு, தேவர் திருமகனாரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 17தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை அறிவித்தது. இதில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வானதி சீனிவாசன், சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தபோது, அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியளித்தார்.

திமுக கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்துடன், பாண்டியாறு - பொன்னம்புழா மற்றும் திருமணிமுத்தாறு திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள குங்காருபாளையத்தில் தமிழ் தேசிய கட்சி நிறுவனத்தலைவர் கோவை செழியனின் 21வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

சேலம் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் வீடு வீடாக முதியவர்களைத் தேடிச் சென்று, அவர்களது காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதியவர்கள் பிரச்சனைகள், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என வாக்குறுதி அளித்த சரவணன், தபால் ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தாலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. இத்தொகுதியில் போட்டியிடும் அந்த கட்சியின் வேட்பாளரான ஓம் ராஜ், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பரப்புரையை துவங்கினார்‍. அவரது தலையில் கட்சியின்சின்னமான குக்கரை வைத்து அமமுகவினர் வாக்களிக்க கோரினர் . வீதிவீதியாக நடந்து சென்றும், வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றும் ஓம்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments