பக்தி பர்ஸ்ட் பரப்புரை நெக்ஸ்ட்..! தாரை தப்பட்டை கிழியபோகுது
அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். மக்கள் சேவைக்காக பக்தியுடன் வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கிய வேட்பாளர்கள்.
தாரை தப்பட்டை முழங்க, குதுகலமான குத்தாட்டாத்துடன் களைகட்ட தொடங்கி இருக்கின்றது 2021 தேர்தல்களம்..!
மக்கள் கூட்டத்தை சந்திக்கும் முன்பு, மனதில் பக்தியுடன் மங்களகரமாக தங்கள் பிரசார பயணத்தை துவக்கியுள்ளனர் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள்.
பெரியகுளம் தனித்தொகுதி வேட்பாளர் முருகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.எஸ்.ரவீந்தர நாத் உள்ளிட்டோர் தொண்டர்களுடன் தேர்தல் வெற்றிக்காக அங்குள்ள பட்டாளத்தம்மன் ஆலயத்தில் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
அதன் பின்னர் பேசிய ஓ.பி.எஸ் ரவீந்திரநாத், மூளையை வாடகைக்கு வாங்கி தேர்தலை சந்திப்பதாக திமுகவை கடுமையான விமர்சித்தார்
அந்தியூர் திமுக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று வெற்றிக்காக சாமி தரிசனம் செய்தார்..!
அதனை தொடர்ந்து தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
கோவில்பட்டி அதிமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேங்காய் விடலையுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்
அதிமுகவில் சீட் கிடைக்காமல் அமமுகவுக்கு செல்வது அரசியல் தற்கொலைக்கு சமம் என்று கடம்பூர் ராஜூ விமர்சித்தார்
அவினாசி தொகுதி வேட்பாளராக களம் மிறங்கியுள்ள சபாநாயகர் தனபாலை வரவேற்க வந்திருந்த பெண்கள் சிலர் தெலுங்கு மொழியில் நீங்கள் எங்கள் ஊர்க்காரர் எங்கும் செல்ல வேண்டாம் இங்கேயே இருங்கள் என கூற , சபாநாயகர் தனபால், நான் எங்கும் செல்ல வில்லை, நான் உங்களில் ஒருவன் என தெலுங்கில் தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்
ராணிப்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.எம் சுகுமார், தொண்டர்கள் புடை சூழ அம்மூர் பாப்பாத்தி அம்மன் ஆலயத்தில் வெற்றிக்காக சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்
ஓட்டலில் சாப்பிட்டும், பேருந்தில் ஏறியும், சாலையில் நடந்தும், மின்னல் வேகத்தில் ஓட்டு சேகரித்தார் எஸ்.எம் சுகுமார்
ஸ்ரீரங்கம் தொகுதியின் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கினார்
கோவில் வாசலில் நின்று மக்களிடையே பேசிய கு.ப.கிருஷ்ணன், தமிழகத்தில் மக்களின் சொத்துக்களை பாதுகாக்க, திமுகவினருக்காகவே நில அபகரிப்பு தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்று கடுமையாக சாடினார்.
இன்னும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் முழுமையாக அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் களம் சூடுபிடிக்கும். தேர்தல் திருவிழாவில் இது போன்ற உற்சாகமான காட்சிகளையும் , போர்முழக்கங்களையும் தேர்தல் நாள் வரை பொதுமக்கள் காணலாம்..!
Comments