சட்டை கிழியாமல் சண்டை போடும் டிஜிட்டல் சத்யாகிரகம்... வாரிசு அரசியலை எதிர்க்கிறார்களாம்..!

0 5580

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் 3 கோஷ்டியை சேர்ந்தவர்கள் போட்டிப்போட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாய் சண்டை போட்டாலும், சட்டை கிழியாமல்  நடந்து முடிந்த காங்கிரஸாரின் டிஜிட்டல் சத்யாகிரகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் வேட்பாளரை அறிவித்த பின்புதான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆனால் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் சற்று வித்தியாசமாக வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே கோஷ்டி பூசல் அனல் பறக்கிறது.

முன்னாள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான விஷ்ணு பிரசாத், தனது ஆதரவாளர்களுடன் கே.எஸ். அழகிரிக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் குதித்தார். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தலைவர்கள் தங்கள் உறவினர்களுக்கும், பணத்திற்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் சீட் வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினர்.

விஷ்ணு பிரசாத்துக்கு, போட்டியாக அழகிரியின் ஆதரவாளர், ரஞ்சன்குமார் தனது ஆதரவாளர்களுடன் போட்டிக்கு போராட்டம் நடத்தினார்.

வெயில் வெளுக்க தொடங்கியதும் விஷ்ணு பிரசாத் கோஷ்டியினர் சாமியானாவை வரவைத்து பந்தல் போட்டனர். ரஞ்சன் குமார் கோஷ்டியினர் குடை பிடித்து வெயிலை சமாளித்தனர்.

இந்த ரெண்டு கோஷ்டிக்கும் டப் கொடுக்க 3 வதாக விளவங்கோடு சட்டமன்ற தோகுதியை மீண்டும் விஜயதாரணிக்கு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சாமுவேல் சார்ஜ் என்பவரின் ஆதரவாளர்கள் சத்திய மூர்த்தி பவனுக்குள்ளேயே அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

மாணிக்தாகூர் தனது மாமனாருக்கு மேலூர் தொகுதியை பெறுவதில் கெடுபிடிகாட்டுவதை சுட்டிக்காட்டும் விதமாக மருமகனுக்கும் சீட்டு..! மாமனாருக்கும் சீட்டா ? எனக்கேட்டு விஷ்ணு பிரசாத் கோஷம் எழுப்பினார்.

இந்த நிலையில் சிலர் விளம்பரத்திற்காக, காங்கிரஸ் இயக்கத்திற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி, எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள் என மாணிக் தாகூர் டுவிட் செய்தார்.

அடுத்து கரூர் எம்.பி ஜோதிமணியோ, தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களை டுவிட்டரில் கடுமையாக காய்ச்சி எடுத்தார்

ஒருவருக்கொருவர் டுவிட்டரிலும் , கோஷத்திலும் காட்டிய உக்கிரத்தை கடந்த காலங்களை போல கோதாவில் காட்டவில்லை என்பதால் வாய் சண்டை போடாலும், சட்டை கிழியாமல் அமைதியாக தொடர்ந்தது இந்த சத்யாகிரக போராட்டம்.

மாலையில் சத்தியமூர்த்திபவனுக்கு வந்த கே.எஸ்.அழகிரி, விஷ்ணு பிரசாத்தை உள்ளே அழைத்துச்சென்று சமாதானப்படுத்தி எதிர்ப்பை டெல்லி தலைமைக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை அவர் விலக்கிக் கொண்டார்.

முன்பெல்லாம் காங்கிரஸில் கோஷ்டி மோதல் வந்தால் ஒரு கை பார்ப்போம் என்று சட்டை கிழிவதும்.. நாற்காலிகள் பறப்பதும் வழக்கம்..! ஆனால் தற்போது ரிஸ்க் எடுக்காத டிஜிட்டல் சத்யகிரக போராட்டத்தை காங்கிரஸார் முன்னெடுத்தது கால மாற்றத்தை காட்டியுள்ளது.

அதே நேரத்தில் போட்டிப் போட்டு சீட்டு வாங்கியவர்கள் ஒரு வேலை தேர்தலில் வெற்றி பெற்றால், மக்கள் பணியையாவது டுவிட்டரோடு நிறுத்திக் கொள்ளாமல் தொகுதி பக்கம் வந்து செய்ய வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments