அண்ணன் பொண்ணுனு நம்பிய குடும்பத்துக்கு நடந்த கதி... கொரோனா ஊசி பேரில் நடந்த கொள்ளை!
கடலூர் அருகே சொந்த அத்தை வீட்டிலேயே பெண் ஒருவர் 19 பவன் நகையை ஆட்டையப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - ராசாத்தி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்திகா, மோனிகா என்று இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி திட்டக்குடியில் வேலை பார்த்து வருகிறார்.
கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராசாத்தியின் சொந்த அண்ணன் மகள் சத்யபிரியா. இவர் பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காடு என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். சத்யபிரியா மாலை 3 மணி அளவில் லக்கூரில் உள்ள அத்தையான ராசாத்தி வீட்டிற்கு வந்துள்ளார்.
அன்று இரவு நான் உங்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்து வந்துருக்கேன் அத்தை. நீங்க, மாமா, எல்லோரும் அந்த ஊசியைப் போட்டுகுங்க என்று கூறி, ராசாத்தி அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, மகள்கள் கீர்த்திகா, மோனிகா ஆகிய நால்வருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். ஊசி போட்டுக்கொண்ட நால்வரும் அசந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, ராசாத்தியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச் செயின், மகள் கிருத்திகா அணிந்திருந்த 10 பவுன் தாலிச்செயின், மோனிகா அணிந்திருந்த 2 பவுன் செயின் , கிருஷ்ணமூர்த்தி அணிந்திருந்த ஒரு பவுன் செயின் என மொத்தம் 19 பவுன் நகைகள் களவு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், வீட்டில் இருந்த அண்ணன் மகள் சத்யபிரியாவையும் காணவில்லை என்பதை உணர்ந்த ராசாத்தி குடும்பத்தினர், அவர் போட்டது கொரோனா ஊசி இல்ல மயக்க ஊசி என்பதை தெரிந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்வதறியாது திகைத்து நின்ற ராசாத்தி குடும்பம் , ராமநத்தம் காவல் துறையினரிடம், புகார் அளித்தனர். புகாரின் பேரில் சத்தியபிரியாவை தேடி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் சத்தியபிரியாவிடம் மேற்கொள்ளப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், சத்தியமா நான் தான் நகையை திருடியது என ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து , வழக்கு பதிவு செய்த போலீசார் சத்தியபிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த அத்தை வீட்டிலேயே, அண்ணன் மகள் ஆட்டையைப்போட்ட சம்பவம் லக்கூர் கிராமமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments