ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ரூ.45 லட்சம் பறிப்பு ... நம்பிக்கை மோசடி செய்த பெண் கைது!

நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நடித்து ரூ. 45 லட்சம் ரொக்கம் மற்றும் 60 பவுன் நகைகள் அபகரித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் அருகேயுள்ள பால்பண்ணை பகுதியில் சுப்ரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்ற இவர், விநாயகர் கோயிலை பராமரித்து வருகிறார்.கோயிலுக்குத் தினசரி வரும் நாகை ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அவரின் மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் சுப்பிரமணியத்துக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுப்ரமணியன் குடும்பத்திடம் ராஜேஷ்வரி நெருங்கி பழகியுள்ளார். ஓய்வு பெற்ற கண்டக்டரிடரான சுப்ரமணியத்திடம் பி.எப் பணம் மற்றும் ஓய்வூதிய பணப் பலன்கள் இருப்பதை ராஜேஷ்வரி அறிந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, ராஜேஷ்வரி குடும்பத்தினர் சுப்ரமணியத்திடமிருந்து பணத்தைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தன்னுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகவும், அவை தொடர்பான ஆவணங்கள் சில வருமான வரித்துறை வசமிருப்பதாகவும் அவற்றை மீட்க 45 லட்சம் தேவைப்படுவதாகவும் சுப்ரமணியத்திடம் ராஜேஷ்வரி கூறியுள்ளார். நட்பின் அடிப்படையில் உதவி செய்ய முடிவெடுத்த சுப்ரமணியன் 45 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளார். பிறகு, ராஜேஷ்வரி மேலும் 20 லட்சம் கேட்டுள்ளார். சுப்ரமணியம் தன்னை நம்ப வேண்டுமென்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் போல தன் குடும்பத்தினரான ராகுல் உள்ளிட்ட 7 பேரை சுப்ரமணியத்தின் வீட்டுக்கு ராஜேஷ்வரி அழைத்துச் சென்றுள்ளார். வருமான வரித்துறை சீல், அதிகாரிகள் கையெழுத்து எனப் போலியான ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி 60 பவுன் நகைகளையும் சுப்ரமணியடத்திடமிருந்து ராஜேஷ்வரி வாங்கியுள்ளார். பணம், நகைகள் வாங்கி பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் எதையும் திருப்பித் தரவில்லை.
மேலும், ராஜேஷ்வரி உள்ளிட்ட 8 பேரும் தலைமறைவாகி விட்டனர். தொடர்ந்து, சுப்ரமணியன் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணன், சாந்தா, நந்தினி, முருகன், வெங்கட பாலாஜி, ராகுல், ராமு, ராஜா ஆகியோரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி தஞ்சையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அவரை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் நாகை மகளிர் காவல் நிலையத்துக்கு ராஜேஷ்வரியை அழைத்து வந்த அவரிடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களையும் போலீஸ் தேடி வருகின்றனர்.
Comments