”எனக்கு மணப்பெண் வேண்டும்”..! 2 அடி இளைஞரால் அதிர்ந்த போலீசார்..!

0 5402
”எனக்கு மணப்பெண் வேண்டும்”..! 2 அடி இளைஞரால் அதிர்ந்த போலீசார்..!

ஐந்தாண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வரும் தனக்கு மணப்பெண் தேடி தரும்படி இரண்டடி உயரம் உள்ள 26 வயது இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தை நாடி இருக்கும் சுவாரசிய சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

திருமணத்திற்கு அழகு, சாதி, மதம், படிப்பு, ஆடம்பரம் உள்ளிட்ட பல காரணங்கள் தடையாக இருக்கலாம். ஆனால், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உயரம் தடையாக இருப்பது உள்ளூர் காவல்நிலையத்தில் தொடங்கி முதலமைச்சர் வரை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா பகுதியை சேர்ந்தவர் தான் அஜிம் மன்சூரி. 2 அடி உயரம் இருக்கும் அஜிம் மன்சூரியை சகமாணவர்கள் கேளியும், கிண்டலும் செய்ததால் ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார். பின்னர் தனது சகோதரருடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அஜிம் 21 வயதை அடைந்ததும், அவருக்கு பெண் பார்க்க குடும்பத்தார் முடிவெடுத்துள்ளனர். அஜிமை பார்க்க வரும் பெண் வீட்டாரும், மணப்பெண்களும் அவரது உயரத்தை காரணம் காட்டி பின்வாங்கியுள்ளனர்.

சளைக்காமல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்ட அஜிம் உள்ளூர் காவல்நிலையத்திற்கு சென்று அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். உயரத்தை சுட்டிக்காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை என்பதால் தனக்கு மணப்பெண்ணை தேடி தரும்படி கூறியுள்ளார். அஜிமின் இந்த புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், திருமணத்தில் மணமக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என்றும், திருமணம் செய்ய மணமக்களை தேடி தருவது தங்களது வேலையில்லை என்று கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர்.

தொடர்ந்து தனக்கு மணப்பெண் வேண்டுமென அடம்பிடித்த அஜிம், இந்த ஆண்டின் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டுமென சபதமெடுத்திருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு தனது மனைவி சிம்லா, கோவா, மணலி போன்ற இடங்களுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறி போலீசாருக்கு மேலும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

ஒருவழியாக அந்த இரண்டடி மனிதனை சமாளித்த போலீசார் அவருக்கான மணமகள் விரைவில் கிடைப்பாள் எனக்கூறி அனுப்பி வைத்தனர். இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு இதேபோன்று திருமணம் செய்துக் கொள்ள மணமகளை தேடி தரும்படி காவல்நிலையத்தை நாடிய அஜிம், உத்திர பிரதேசத்தின் உன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவிடமும் கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் விட்டு வைக்காத அஜிம் மன்சூரி தனக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் மணப்பெண் தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதனிடையே, மொரதாபாத் பகுதியில் இருந்து அஜிமை திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டடி மணமகனின் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியாமல் போலீசாரும், முதலமைச்சரும் திணறி வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments