சிமெண்ட் குடோனாக மாறிய பாலூட்டும் அறை... கைக்குழந்தையுடன் தவித்து வரும் தாய்மார்கள்!

0 4107
சிமெண்ட் குடோனாக மாறியுள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை சிமெண்ட் மூட்டை அடுக்கிவைக்கும் குடோனாக மாறியதால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் தாய்மார்கள் தவித்து வருகின்றனர்.

பொது இடங்களில் பாலுக்காக அழும் குழந்தைகளையும், தாய்ப்பால் கொடுக்கமுடியாமல் அவதியுறும் தாய்மார்களின் நிலை சொல்லி புரிய வைக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2015ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 351 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்கள் அறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கைகுழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருந்ததால் இத்திட்டம் பெரும் வரவேற்பினை பெற்றது. ஆனால் கடந்த சில வருடங்களாக அதனை சரியாக பராமரித்து வராத காரணத்தால் தற்போது பல இடங்களிலும் தாய்மார்களின் பாலுட்டும் அறை பயன்படுத்த முடியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல இடங்களில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளது. இந்த திட்டம் துவங்கப்படும்போது எப்போதும் திறந்திருந்த பாலூட்டும் அறையானது பின்னர் அடிக்கடி பூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த திட்டப்பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.

தற்போது கிணத்துக்கடவு பேருந்து நிலைய வளாகத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக பயன்படுத்தும் சிமெண்ட் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக தாய்மார்கள் பாலூட்டும் அறையானது சிமெண்ட் மூட்டை மற்றும் கட்டுமான பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை இருந்தும் பயன்படுத்த முடியாது நிலை உருவாகியுள்ளது. இதனால் தாய்மார்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கைகுழந்தையுடன் பொது இடங்களுக்கு வரும் தாய்மார்களுக்கு வரபிரசாதாமாக இருந்த பாலூட்டும் தாய்மார்கள் அறையை மீண்டும் அவர்கள் பயன்படுத்தும் வகையில் சிமெண்ட் மூட்டைகளை அகற்றி, சுத்தம் செய்து தினமும் திறந்து வைக்க வேண்டுமென பொள்ளாச்சி பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments