வாய்ப்புள்ளைய நம்பி வீதிக்கு வந்த தேமுதிக..! கூட்டணி பேச்சு சோலி முடிஞ்சு..!

0 33941
வாய்ப்புள்ளைய நம்பி வீதிக்கு வந்த தேமுதிக..! கூட்டணி பேச்சு சோலி முடிஞ்சு..!

கூட்டணியில் இருந்து அதிமுக கழற்றிவிட்ட நிலையில், அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு, 50 தொகுதிகள் கேட்டு அடம்பிடித்ததால், அங்கிருந்தும் இடத்தை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

எல்.கே. சுதீஷின் பேராசை மற்றும் விஜய பிரபாகரனின் வாய்வீச்சால் தனித்துவிடப்பட்ட தேமுதிகவின் பரிதாபம் 

2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சி அலுவலகங்களும் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகத்துடன் களமிறங்கிவரும் நிலையில், ஆள்அரவமற்று அமைதியுடன் காணப்படுகிறது தேமுதிக அலுவலகம்..!

விஜயகாந்தின் ஆவேசப் பேச்சு... எங்கு சென்றாலும் திரளும் தொண்டர்கள் கூட்டம் என கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது தெய்வத்தோடும் மக்களோடும் தான் கூட்டணி என்று தனித்துக் களம் கண்டு 31 லட்சம் வாக்குகளை அள்ளி, 10.08 சதவீதத்தை தனதாக்கிய தேமுதிக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டும் 2.22 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

பேசியே வளர்ந்த கட்சிக்கு, பேசுவதற்கு ஆள் வேண்டும் என்பதற்காக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனை அடுத்த வாரிசாக களம் இறக்கினர்.

விஜயகாந்தின் அனல்பறக்கும் மேடைப் பேச்சு இல்லாமல் தவித்துக்கிடந்த தேமுதிக தொண்டர்களிடம்,
குரளிவித்தையில் பாம்புக்கும், கீரிக்கும் சண்டை விடுவதாக ஆட்டம் காட்டும் நபர் போல, "கேப்டன் சிங்கமாக வருகிறார்.

மணிக்கணக்கில் பேசப் போகிறார்.. பூமி அதிரப் போகின்றது..." என்றெல்லாம், கடந்த 2 வருடங்களாக தொண்டர்களை உசுப்பேற்றியதோடு, அனைத்துக் கட்சிகளையும் காய்ச்சி எடுத்து வந்தார் விஜயபிரபாகரன்.

இவர்தான் அப்படி என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே நேரத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளிடமும் கூட்டணி பேரம் நடத்தி அம்பலப்பட்டுப் போன விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் இந்த முறை அதிமுகவிடம் போட்டியிடக் கேட்ட சீட்டுக்களின் எண்ணிக்கை சக்திக்கு மீறியது என்று கூறி, கூட்டணியை விட்டு அதிமுக கழட்டி விட, தே.மு.தி.க தனித்துக் களம் காணப் போவதாகப் பொங்கினார் மினி கேப்டன்..!

அவர் பேசிய சூடு அடங்குவதற்குள் அமமுகவுடன் கூட்டணி பேரத்துக்கு கதவைத் தட்டியது தேமுதிக. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.46 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அமமுக விடம், தங்களுக்கு 50 தொகுதிகளுடன் தங்களை கணிசமாக கவனிக்கக் கூறியதால் குக்கர் பிரசர் ஏறி, முரசை வெளியே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

மினிகேப்டன் கூறியபடி தனித்துப் போட்டியிட்டு கெத்தைக் காட்டலாம் என்றால், விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகள் எல்லாம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடிப்பதாகக் கூறப்படுகின்றது.

234 தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேடுவதற்குள் மாவட்டச் செயலாளர்கள் விழிபிதுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்..!

என்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு ஆள்பிடிப்பதைப் போல மாவட்டச் செயலாளர்கள் கையில் செல்போனுடன் விருப்பமனு அளித்தவர்களைத் தொடர்பு கொண்டால், சிலர் கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாராக இல்லை என்று தெரிவிப்பதாகவும், இன்னும் சில நிர்வாகிகள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தேர்தல் தேமுதிகவிற்கு மட்டுமல்ல கூட்டணி பேரத்தில் ஈடுபட்டு திருப்தி இல்லாமல், கொடுத்த சீட்டுக்களை பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திக்கும் மற்ற கட்சிகளுக்கும் தக்க பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்க வேண்டும் என்று முதன்முதலாக அதிமுகவுடன் கோரிக்கை வைத்த பிரேமலதாவின் தேமுதிகவுக்கு இறுதியில் எந்த கூட்டணியிலும் இடம் இல்லை என்பது தான் 2021 தேர்தலின் சூப்பர் டுவிஸ்ட்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments