அதிமுகவின் 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

0 2732
அதிமுகவின் 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

அதிமுகவின் 3வது கட்ட வேட்பாளர் பட்டியலில் பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுகவின் 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ், ஒபிஎஸ் வெளியிட்டுள்ளனர். அதில், பெரம்பலூர் தொகுதியில் இளம்பை இரா. தமிழ் செல்வன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் அறிவுடைநம்பி அதிமுக சார்பில் களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லால்குடி தொகுதி கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகள் வரை ஒதுக்குமாறு வலியுறுத்தி வந்த நிலையில் 6 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய தமாகா தலைவர் ஜிகே வாசன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தார். அவரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் திரு.வி.க.நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிடும் என அறிவித்தார்.

 அதே போன்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு, தொகுதி ஒதுக்குவது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில், அந்த கட்சியின் தலைவர் ந.சேதுராமன் பங்கேற்றார். இதுகுறித்த அறிவிப்பில், அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு, திருச்சுழி தொகுதி ஒதுக்கப்படுவதாகவும், இரட்டை இலைச் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதிமுக இதுவரை 178 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும், தமாகாவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் , மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 233 தொகுதிகள் இறுதியான நிலையில், பத்மநாபபுரம் தொகுதி மட்டும் ஒதுக்கப்படாமல் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments