தொகுதி பங்கீட்டிற்கு எதிர்ப்பு; திமுகவினர் போராட்டம்

திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் சட்டமன்ற தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் அரியலூர் சட்டமன்ற தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரியலூர் தொகுதியை மீண்டும் திமுகவுக்கே வழங்க வலியுறுத்தியும் அரியலூர் பேருந்து நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றவரை போலீசாரும், அங்கிருந்தவர்களும் தடுத்து நிறுத்தினர்.
இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, பேருந்து நிலையம் முன் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் அறந்தாங்கி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த திமுகவினர் திடீரென கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கூட்டணியில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலையில் திமுக தலைமையகம் வந்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த திமுகவினர், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் திடீரென கோஷங்கள் எழுப்பினர்.
Comments