’தாத்தா... ஆசீர்வாதம் பன்னுங்க’ - பாசத்துக்காக ஏங்கிய முதியவரிடம் நடித்து திருடிய தம்பதி..!

0 31113

சென்னையில், விவாகரத்து பெற்றதுடன் மகனையும் இழந்து பாசத்துக்கு ஏங்கியபடி தனிமையில் வசித்து வந்த முதியவரிடம் அன்பாகப் பேசி வைர மூக்குத்தி, பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற தம்பதி மற்றும் துணையாக இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, புழுதிவாக்கம், பாலாஜி நகரில் வசித்து வருகிறார் 75 வயதாகும் சாமிநாதன். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் துணைப் பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற சாமிநாதனின் மனைவி 40 வருடங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார். சாமிநாதனின் மகனும் 17 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொள்ள, பாசத்துக்கு ஏங்கியபடி சாமிநாதன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இந்த சூழலில் தான், சாமிநாதனின் வீட்டருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தினேஷ் - நீர்சபா, ஐசக், பிரபு என்கிற அப்புக்குட்டி ஆகியோர் குடிவந்துள்ளனர். இவர்கள் நால்வருமே சாமிநாதனிடம் அன்பாகப் பேசி பழகி வந்துள்ளனர். அதிலும், நூர்சபா மீது சுவாமிநாதன் அதிகமாகப் பாசம் காட்டியுள்ளார். நூர்சபாவைத் தனது பேத்தியைப் போலவே நினைத்த சாமிநாதன், தனது குடும்பச் சூழல், ஓய்வூதிய விவரங்கள், சேமிப்பு, நகைகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், கடந்த 4 - ம் தேதி சாமிநாதன் வீட்டுக்கு வந்த தினேஷ் - நூர்சபா தம்பதியர், “எங்களுக்குத் திருமண நாள். ஆசிர்வாதம் பன்னுங்க தாத்தா” என்று கூறி வாழ்த்துக்களைப் பெற்றுள்ளனர். பிறகு, இரவு உணவு உண்பதற்காகத் தாம்பரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, “மரம் அறுக்கும் தொழில் செய்து வருவதாகவும் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், சுவாமிநாதன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து, கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவரை அறைக்குள் சாத்தி, பூட்டிவிட்டு, வீட்டுச் சாவியைப் பிடுங்கிக்கொண்டு புழுதிவாக்கத்துக்கு நால்வரும் சென்றுவிட்டனர்.

அங்கிருந்து தப்பிய சாமிநாதன் தனது தம்பியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று பார்த்த போது ஏழரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மூக்குத்தி, பணம் மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சாமிநாதன் புகார் அளித்தார்.

அதன் பிறகு, போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த போது அந்த கும்பல் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பெங்களூருக்கு சென்ற காவல் துறையினர் தினேஷ் என்கிற குரு (29), அவரின் மனைவி நூர்சபா (23). ஐசக் (31), காஞ்சிபுரம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபு என்கிற அப்பு குட்டி (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.6 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

முன் பின் தெரியாதவர்களிடம் சொந்த விவரத்தைக் கூறினால், இப்படித்தான் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணம் என்று எச்சரித்துள்ளனர் காவல் துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments