'சிறுநீரகப் பிரச்னையால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதே லட்சியம்!'- கன்னியாகுமரி பெண்ணின் புதிய முயற்சி

0 5185

சிறுநீரகம் செயல் இழந்து உயிரிழந்த கணவரை நினைத்து  வீட்டில் முடங்காமல் சமூகத்தில் சிறுநீரக கோளாறால் யாரும் உயிரிழக்க கூடாது என்ற எண்ணத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் சிறுநீரக சிகிச்சை மையம் தொடங்கி இலவசமாக சிகிச்சை அளித்து வரும் பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

சிறுநீரகம் என்பது நமது உடலில் இருக்கும் இயற்கை வடிகட்டி ஆகும். ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளையும் வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. இந்த வடிகட்டும் திறனை சிறுநீரகம் இழக்கும் போது, அதிக அளவு திரவம் மற்றும் கழிவுகள் உடலில் சேர்ந்து சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  டயாலிசிஸ் மூலம் ரத்தத்திலிருந்து  கழிவுகளை அகற்ற வேண்டும் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உயிரோடுள்ள அல்லது இறந்த தானமளிக்கும் நபரின் சிறுநீரகத்தை பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

உலக அளவில் 10 சதவீதம் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின் படி, ஆண்டுதோறும் இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக பாதிப்புக்குள்ளாவது தெரிய வந்துள்ளது.  இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலர் சிறுநீரக செயலிழப்பு நோய்க்கு உள்ளாகின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். இதனால்,  ஏழை மக்கள் பலரும் சரியான சிகிச்சைப் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அப்படி, ஏழைகளுக்கு உதவுவதற்காக பேபி என்பவர் தனி அறக்கட்டளையை நிறுவி உதவி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பேபி  பார்வதிபுரத்தில் சைன்யுவர் வே டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.   சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிந்து அவர்க்ளை தங்கள் அறக்கட்டளையில் தங்கவைத்து, உணவளித்து மருத்துவச் செலவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ரூ.10 லட்ச  வரை செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு கூட இந்த நிறுவனம் உதவி வருகிறது. அந்த வகையில் ரூ.  10 லட்சம் செலவில்  10 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேபி கூறுகையில், "தற்போது கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள சிறுநீரக நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை ஏற்பாடுகளை அளித்து வருகிறோம். இனி வருங்காலங்களில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தனது கணவருக்கு உரிய சிகிச்சையளித்து காப்பாற்ற முடியாமல் போனதே இது போன்ற உயரிய சேவை எண்ணம் தோன்ற காரணமென்றும், மேலும் இந்த மனிதாபிமான சேவை பல தரப்பட்ட மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளார். 

தன்னலமற்ற இந்த தொண்டு நிறுவனத்தின் உதவியால் இதுவரை ஏராளமான சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments