'நண்டுசிண்டெல்லாம் நம்மள பேசுதே...! ' கேப்டன் வளர்த்த கட்சி தேவையில்லாமல் போனதன் சோகப்பின்னனி

0 7732

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தே.மு.தி.க  கட்சி அறிவித்திருந்தாலும் அந்த கட்சியின் முக்கிய தலைகள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி  சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீட்டுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையில், தேமுதிக தரப்பில் 41 சீட்டுகள் கேட்கப்பட்டது.  அதிமுக தரப்பில் 6 சீட்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை  சற்றும் எதிர்பார்க்காத தேமுதிகவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில் 41 இல்லை என்றாலும் பரவாயில்லை பாமகவிற்கு கொடுத்ததை போல 23 தொகுதிகளாவது தாருங்கள் என கேட்டுள்ளனர். அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 13 சீட்டுக்கள் மட்டுமே தர முடியுமென்று கறாராக கூறி விட்டனர்.

image

இதனால் கோபமடைந்த தேமுதிக நிர்வாகிகள் சில நாட்களுக்கு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்தனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், விஜய் பிரபாகரன் என்று அந்த கட்சியின் முக்கிய தூண்கள்  எப்போதுமே அதிரடியாக பேசக் கூடியவர்கள் . சீட்டுக்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே  திருவண்ணாமலை மாவட்டத்தில் பேசிய தே.மு.தி.க  கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் "நாங்கள் ஒன்றும் அதிமுக பின்னால் செல்லவில்லை, அவர்கள் தான் எங்கள் பின்னால் வருகிறார்கள். எங்களை கூட்டணிக்கு அழைத்து தினசரி பல கட்சிகள் போன் செய்து கொண்டே இருக்கின்றன . என் செல்போனை வேண்டுமானால் எடுத்துப் பாருங்கள்" என்றெல்லாம் பேசினார். இந்த பேச்சுக்கு பிறகாவது அ.தி.மு.க இறங்கி வரும் என்று சுதீஷ் எதிர்பார்த்தார். ஆனால், அதி.மு.க தலைமை அசைந்து கொடுக்கவில்லை.  தொடர்ந்து ,  கடந்த 7ஆம் தேதி இரு கட்சிகளுக்குமிடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. முதல் அமைச்சரை சந்தித்த எல்.கே. சுதீஷ் மற்றும் தேமுதிக குழுவினர் காரசாரமாக விவாதித்துள்ளனர். 

கடந்த 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் விழுந்த ஒட்டு  புள்ளிவிவரங்களை தேமுதிகவினர் எடுத்துரைக்க, அதெல்லாம் கடந்த கால வரலாறு இப்போது உங்கள் நிலை என்ன? என்று அதி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தற்போது, உங்களின் வாக்கு சதவீதம் 2 சதவீதத்துக்கும் கீழ் தான் என்றும் அ.தி.மு.க தரப்பில் இடித்துரைக்கப்பட்டதாம்.  இதனால், காயம்பட்ட புலியாக திரும்பிய சுதீஷ் தே.மு. தி.க மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தன் மனக்குமுறல்களை கொட்டி தீர்த்தார். சுதீஷ் பேச்சால் கொந்தளித்த தேமுதிகவினர் உடனடியாக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். லாபமோ, நஷ்டமோ தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் '' என்று கொந்தளித்தனர். விளைவாக கூடடணியில் இருந்து கேப்டன் கட்சி கழன்று கொண்டது. 

image

தே.மு.தி.க வை அ.தி.மு.க கண்டு கொள்ளாமல் போக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில், முக்கிய காரணமாக விஜயபிரபாகரன் பேச்சு என்றும் கூறுகிறார்கள். 'அந்த கட்சியில் நண்டு சிண்டுலாம் நம்மளை பேசுதேனு'  அ.தி.மு.க தரப்பில் புழுக்கம் இருந்துள்ளது. மேடைக்கு மேடை தே.மு.தி.க வால்தான் அ.தி.மு.க ஆட்சியில் இருப்பது போன்று விஜயபிரபாகரன் தாறுமாறாக பேசி அ.தி.மு.க முக்கிய புள்ளிகளின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார். விஜயகாந்தும் ஆக்டிவாக இல்லாத நிலையில் தே.மு.தி.கவால் நமக்கு என்ன பலன் என்கிற எண்ணமும் அ.தி.மு.க தலைமையிடத்தில் ஏற்பட்டுள்ளதால் தே.மு.தி.கவை கழற்றியே விட்டு விட்டது. தே.மு.தி.கவின் முகத்தை நன்கு அறிந்த தி.மு.கவும் அந்த கட்சியை விட்டு விலகியே இருக்கிறது. இதனால், இனிமேல் மற்றோரு திராவிட கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பில்லை.

கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேமுதிக தோல்வியை தழுவியது. இந்த முறை 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. ஆனால், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் தொண்டர்களையாவது சற்று உற்சாகத்துடன் வைத்து கொள்ளலாம் என்பது விஜயகாந்தின் எண்ணமாக உள்ளதாம். கேப்டன் என்ற ஒற்றைச் சொல் தேமுதிக தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்கும் மந்திர சொல் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், கட்சிக்கும் கட்சியை தொடர்ந்த நடத்தவும் 4 எம்.எல்.ஏக்களாகவது அவசியம் என்பதும் அத்தியாவசியம் என்பதையும் தே.மு.தி.க தலைமை புரிந்து கொண்டால் நல்லது என்று அரசியல் விமர்சகள் கூறுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments