அ.தி.மு.க. தலைமையகத்தில் விடிய விடிய ஆலோசனை

0 5460
அ.தி.மு.க. தலைமையகத்தில் விடிய விடிய ஆலோசனை

தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விடிய விடிய ஆலோசனை மேற்கொண்டனர். பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தேமுதிக திடீரென கூட்டணியில் இருந்து விலகியது. இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளர்களை தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டது.

இரவு 8 மணியளவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து, இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி குழுவினர், அதிமுக தலைமை அலுவலத்திற்கு வந்தனர். பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, கிஷன் ரெட்டி, அண்ணாமலை உள்ளிட்டோர் வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பின் போது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றியும், பரஸ்பரம் இருகட்சியினர் விவாதித்தனர். தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டதாக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்தார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, தொகுதிப் பங்கீடு குறித்த விபரம் இன்று அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

இரு கட்சியினரும் சென்ற பின்னரும் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மீண்டும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டம் அதிகாலை வரை நீடித்தது. தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் இரண்டாவது பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments