லாரியை கடத்தி கார் மீது மோதிவிட்டு தப்ப முயன்ற ஆசாமி.. சினிமா பாணியில் பிடித்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் குடிபோதையில் டிப்பர் லாரியை கடத்தி கார் மீது மோதிவிட்டு தப்ப முயன்ற ஆசாமியை சினிமா பாணியில் விரட்டிச் சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
சாயர்புரத்தில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றி வருவதற்காக தூத்துக்குடி சென்ற டிப்பர் லாரியை எட்டயபுரம் அருகே ஓரம் கட்டிவிட்டு சாவியை எடுக்காமல் ஓட்டுநர் ஜான்சன் சாப்பிடச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் லாரியை மர்ம நபர் கடத்திச் செல்வதைப் பார்த்து மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்ற ஜான்சன், போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். போலீசுக்கும் ஜான்சனுக்கும் நீண்ட நேரம் போக்குகாட்டிய மர்ம நபர், இளம்புவனம் அருகே எதிரே வந்த ஸ்கார்பியோ கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளான்.
இதில் காரில் வந்த 4 பேர் காயமடைந்தனர். ஒருவழியாக அரசரடி அருகே 2 லாரிகளை சாலை நடுவே நிறுத்தி, மர்ம நபரை போலீசார் மடக்கினர். விசாரணையில் அவன் இருக்கன்குடியைச் சேர்ந்த வெற்றிவேல் குமார் என்பதும் குடிபோதையில் லாரியை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
Comments