தவறை தட்டிக்கேட்ட ஆசிரியர்...துப்பாக்கியால் சுட்ட மாணவன்!

0 1021

உத்தரப் பிரதேசத்தில் மாணவன் ஒருவன் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாதில் உள்ள சரஸ்வதி விஹார் காலனியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு சச்சின் தியாகி என்பவர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் ஆசிரியராக இருந்தார். பள்ளியில் அவர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, மாணவன் ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து சக மாணவர்களிடம் தவறாகவும், கடுமையாகவும் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் சச்சின் தியாகி, அந்த மாணவனையும் அவன் நண்பர்களையும் அழைத்து அறிவுரை வழங்கியதோடு மீண்டும் எந்த தவறும் செய்யக்கூடாது என்று கூறி எச்சரித்து அனுப்பியதாகக் தெரிகிறது.

 தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை மதியம், வகுப்புகளை முடித்துவிட்டு சச்சின் தியாகி வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில், வகுப்பில் அவர் கண்டித்த மாணவனும் அவன் நண்பர்களும் சச்சின் தியாகியின் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து நின்றுள்ளனர் . திடீரென வந்த மாணவர்களைக் கண்டு சச்சின் தியாகி குழம்பிப்போய் நின்றார். அவர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த மாணவன், சச்சின் தியாகியை நோக்கிச் சுட்டான். அதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சச்சின் தியாகி, சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவன் மீதும் அவன் நண்பர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்குத் துப்பாக்கி எப்படிக் கிடைத்தது பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மாணவர்களின் பெற்றோர்களையும் காசியாபாத் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மாணவர்களின் செல்போனும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments