தேமுதிக அத்துமீறக் கூடாது.! அதிமுக கடும் எச்சரிக்கை.!

0 4122
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் - அதிமுக விளக்கம்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியபிறகு, தேமுதிகவினர் முதிர்ச்சியற்ற அரசியலை வெளிப்படுத்தி, கீழ்த்தரமாக பேசக்கூடாது என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேமுதிக அத்துமீறினால், அதிமுகவாலும் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது துரதிஷ்டவசமான நடவடிக்கை என்றார். கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, தேமுதிகவினர் கீழ்த்தரமாக பேசக்கூடாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கூட்டணியில் இருந்ததால், தேமுதிகவின் சுதீஷ் பேசிய பேச்சுகளை பொறுத்துக் கொண்டதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஏன், அதிமுகவினராலும், தேமுதிகவை வாங்கு வாங்கு என்று வாங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

இனிவரும் காலங்களில், கீழ்த்தரமான அரசியலை தொடர்ந்தால் தேமுதிகவிற்கு எங்களாலும் பதிலடி கொடுக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார். தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுக தான் என்றும், அந்த நன்றியை மறந்துவிட்டு சுதீஷ் பேசுவதாகவும், அமைச்சர் சாடினார்.

234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெல்லும் என்று திட்டவட்டமாக தெரிவித்த ஜெயக்குமார், அதிமுக தோற்கும் என்று கூறும் சுதீஷ் என்ன ஜோசியரா? என வினவினார்.. தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்றும், இல்லை என்றால் அதிமுக பதிலடி கொடுக்கும் என்றும், அமைச்சர் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டுப் பெறுவது தான் புத்திசாலித்தனம் என்ற ஜெயக்குமார், ஆனால், அக்கட்சி, புத்திசாலித்தனத்துடன் செயல்படவில்லை என சுட்டிக்காட்டினார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவின் பலத்தை கடந்த தேர்தல் மூலமே தெரிந்து கொண்டதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments