அயராத அரசியல் பணிக்கிடையே சடுகுடு ஆடிய ரோஜா... இன்பஅதிர்ச்சியில் இளைஞர்கள்!

0 6741
அயராத அரசியல் பணிக்கிடையே சடுகுடு ஆடிய ரோஜா... இன்பஅதிர்ச்சியில் இளைஞர்கள்!

ஆந்திர மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும், திரைத்துறை நடிகையுமான ரோஜா விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது, யாரும் எதிர்பாராத தருணத்தில் களத்தில் இறங்கி இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாடியது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.

செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரோஜா 90களில் இளைஞர்களின் இதையத்தை கொள்ளையடித்த முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ரஜினி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது மட்டுமின்றி, அவர் நடித்த உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா உள்பட பல படங்கள் வெற்றியை அள்ளி தந்தன.

கதாநாயகியாக நடித்த காலங்கள் மாற, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்த ரோஜா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தொடர்ந்து அரசியலில் பயணித்த ரோஜா, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது தொகுதியான நகரி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டி ஒன்றை தொடங்கி வைக்க ரோஜா சென்றுள்ளார். போட்டி தொடங்கப்பட்டதும் களத்தில் இறங்கி கபடி ஆடிய இளைஞர்களை பார்த்து உற்சாகமடைந்த ரோஜா யாரும் எதிர்பாராத நிலையில், சேலையை தூக்கி சொருகிக் கொண்டு தானும் கபடி விளையாட களத்தில் இறங்கினார்.

இருக்குழுகளில் ஒரு குழுவின் சார்பில் விளையாடிய ரோஜா, கபடி களத்தில் எதிரணியின் இடத்திற்கு சென்று இளைஞர்களை தோற்கடித்து அசத்தினார். அப்பொழுது அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டியும், விசிலடித்தும் ஆரவாரம் எழுப்பினர்.

பின்னர் பேசிய ரோஜா, தனக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே கபடி விளையாடுவது என்றால் மிகுந்த ஆர்வம் என்றும், கபடி போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் மனமும், உடலும் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் கூறினார். மேலும், தற்பொழுதுள்ள அரசியல் மற்றும் வேலை பளுக்குகளுக்கு இடையே மாணவர்களுடன் இந்த கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் ரோஜா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments