பணிப்பெண்ணை பழிவாங்க சிறுமிக்கு திருமண அழைப்பு அச்சடிப்பு... கம்பி எண்ணும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்!

0 1697

ஆலங்குடி அருகே தனது வீட்டு வேலைக்கு தாய் வராத ஆத்திரத்தில் அவரது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கப் போவதுபோல் போலி பத்திரிக்கை அடித்து விநியோகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் ஆறு மாதத்திற்கு முன்பு வரை முத்துமணி என்ற கணவனை இழந்த பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று சுந்தரமூர்த்தியின் வீட்டுக்கு  வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார் முத்துமணி.  சுந்தரமூர்த்தி அவரைப் பலமுறை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் முத்துமணி இனி உங்கள் வீட்டுக்கு வேலைக்கு வரவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு திருமணம் என்பது போல பத்திரிக்கை அச்சடித்துள்ளார்.   மணமகனாக ஒரு பெயரை குறிப்பிட்டு அந்தப் பத்திரிக்கையை பலருக்கும் கொடுத்துள்ளார். 

மேலும் முத்துமணி வீட்டுக்கு சென்றும் வீட்டிலும் அந்தப் பத்திரிக்கையை வைத்துவிட்டு அவரது வீட்டினுள் இருந்த ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து முத்துமணி சுந்தரமூர்த்தியை தட்டி கேட்ட போது,  கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து முத்துமணி ஆலங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முத்துமணி அளித்த புகாரின் அடிப்படையில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அலாவுதீன், உதவி ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் சுந்தரமூர்த்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments