அக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..! புல்லட்டுடன் தப்பிய சீட்டர்

0 27104
அக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..! புல்லட்டுடன் தப்பிய சீட்டர்

திருப்பத்தூர் அருகே மாதச்சீட்டு நடத்தி மோசடி செய்த பணத்தில் தொழில் அதிபர்களாக வலம் வந்தவர்களை, பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் முற்றுகையிட்டனர். ஒருவர் தப்பிச்சென்ற நிலையில், சிக்கிய மற்றொருவருக்கு தர்ம அடி விழுந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி பகுதியில் அகர்பத்தி மற்றும் கயிறு திரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் பாபு மற்றும் நடராஜன் ஆகியோரின் தொழிற்சாலையை நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகையிட்டனர்..!

பாபுவும், நடராஜனும் மாதச்சீட்டு நடத்தி திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கிரீன் பெர்மார்மர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் சீட்டுத் திட்டம் நடத்தி ஏராளமான பெண்களிடம் பணம் பெற்றுள்ளனர். அதாவது மாதம் 1000 ரூபாய் வீதம் 5 வருடங்களுக்கு கட்டினால் அந்த பணத்தை இரட்டிப்பாக்கி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தருவோம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பி அப்பகுதி மக்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளனர். பணம் கட்டி முடித்தவர்களுக்கு முதிர்வுத்தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த பாபுவும், நடராஜனும் சீட்டு கம்பெனியை இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஜாமீன் பெற்ற இவர்கள் இருவரும் மோசடி பணத்தில் சொந்தமாக தொழில் செய்து வருவது தெரியவந்ததால், அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

காவல்துறையினர் வந்து அங்குள்ள மக்கள் தொழிற்சாலைக்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டனர். அப்போது அங்கிருந்த நடராஜனிடம் காவல் ஆய்வாளர் விசாரித்த போது, தலைவரே வாங்க பேசிக் கொள்ளலாம் என்று நடராஜன் அழைக்க, அவர்களிடம் ஏமாற்றிய பணத்திற்கு பதில் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்று கூறினார்.

அப்போது அங்கிருந்து ஆவணங்கள் எடுத்து வருவதாக, கூறிச்சென்ற நடராஜன், புல்லட்டில் ஏறி தப்பினார். பாதிக்கப்பட்டவர்கள் தடுத்து நிறுத்த முயன்றும் அவர்களிடம் சிக்கவில்லை

அப்போது அங்கிருந்த பாபு அவரை அழைத்து வருவதாக சொல்லி தப்ப நினைக்க, அவரை பெண்கள் மடக்கி பிடித்தனர், போலீஸ் உதவியுடன் அங்கிருந்து செல்ல முயன்ற பாபுவிற்கு அங்கிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

விரட்டி விரட்டி அடித்த நிலையில் , ஒருவழியாக காவல்துறையினர் அவரை பத்திரமாக மீட்டு அழைத்துச்சென்றனர்

சீட்டு கம்பெனி நடத்துவோர் எப்படி பணத்தை நாம் கட்டும் பணத்தை இரட்டிபாக்கித் தருவார்கள் என்று ஒரு நிமிஷம் சிந்தித்திருந்தாலே, இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் சிக்காமல் தப்பித்திருக்க முடியும் என்று சுட்டிகாட்டுகின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments