அக்ரி படிக்க ஆசை: அரசு கல்லூரியின் தவறான வழிகாட்டுதலால் கனவை இழந்த மாணவி... தற்போது கேபிள் பதிக்கும் அவலம்!

0 303043
சத்தியாதேவி கேபிள் பதிக்கும் காட்சி. தன் கனவு பற்றி பேசுகையில் கண்ணீர் விடுகிறார்.

விவசாயம் படிக்க ஆசைப்பட்ட மாணவிக்கு அரசு கல்லூரியின் தவறான வழிகாட்டுதலால் பட்ட படிப்பு கூட படிக்க முடியாமல் தற்போது, கேபிள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மங்களுரு ஒன்றியத்திலுள்ள வீ.சித்தேரியை சேர்ந்த ராமசாமி சின்னபொண்ணு தம்பதிக்கு துரைராஜ் என்ற மகனும், சத்யாதேவி என்ற மகளும் உள்ளனர் ராமசாமியும், சின்னபொண்ணுவும் புதைவட கேபிள் பதிக்கும் ஒப்பந்ததரரிடம் தினக்கூலி அடிப்படையில் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

கஷ்ட ஜீவனத்துக்கிடையே  மகன் துரைராஜை டிப்ளமோ வரையில் படிக்க வைத்தனர். மகள் சத்தியாதேவியை நைனார்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தனர். சத்தியாதேவிக்கு விவசாயத்தில் பட்ட படிப்பு படிக்க ஆர்வம் இருந்தது.  இதனால், பள்ளியில் அக்ரி பாடப்பிரிவு எடுத்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் 382 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் , அக்ரி படிக்க சரியான வழிகாட்டுதல் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், ஈரோட்டிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் மகள் சத்தியாதேவியை தாயார் சேர்த்துள்ளார். அங்கு சத்தியாதேவி படிக்க விரும்பிய அக்ரி பாடப் பிரிவு இல்லாத நிலையில் சுயநிதி பிரிவில் மைக்ரோ பயாலஜி பாட பிரிவை எடுத்து படிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

மாணவி சத்தியாதேவியும் தன் மனதை மாற்றிக் கொண்டு மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். ஆனால், கல்லூரி தொடங்கும் போது மைக்ரோ பயாலஜி பாட பிரிவிற்கு பதிலாக பயோ கெமிஸ்ட்ரி பாட பிரிவில் அட்மிசன் போட்டு விட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்து மாணவி கேட்கவே கல்லூரி நிர்வாகம் உரிய பதிலளிக்கவில்லை. நாங்கள் கொடுத்த பயோ கெமிஸ்ட்ரி பாட பிரிவில் நீ படி என்று வலியுறுத்தியுள்ளது. இதனால், வேறு வழியில்லாமல் யாரை அணுகுவது என்றும் தெரியாமல் அரை மனதாக ஏற்றுக்கொண்ட மாணவி சத்தியாதேவி பயோ கெமிஸ்ட்ரியோ படித்துள்ளார். பெற்றோர் கடன் வாங்கி கொடுத்த தொகையில் கல்லூரி கட்டணமாக முதலாம் ஆண்டுக்கு ரூ.22,000 பேருந்து கட்டணமாக ரூ.7,000 தேர்வு கட்டணமாக ரூ. 2, 000 செலுத்தியுள்ளார்.image

மாணவி சத்தியா தேவி முதல் பருவ தேர்வையும் எழுதினார். ஆனால், முடிவு வரவில்லை . கல்லூரியை தொடர்பு கொண்டு சத்தியாதேவி கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பில் வேதியியல் பாடப்பிரிவு எடுத்து படிக்காத நிலையில் பயோ கெமிஸ்ட்ரி படிப்பை தொடர முடியாது.அதனால் டிஸ்குவாலிபிகேசன் செய்துள்ளதாக அசால்ட்டாக கூறியுள்ளனர். மனமுடைந்த மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கண்ணீருடன் கேட்டும் அவர்கள் கல்லூரியில் சேர்க்கவில்லை. மாணவி செலுத்திய கல்லூரி கட்டணத்தில் ரூ. 11 .000 திருப்பி கொடுத்துள்ளனர்.

மாணவியின் சான்றிதழ்களையும் கல்லூரி நிர்வாகம் திருப்பி கொடுத்து கல்லூரியை விட்டே அனுப்பி விட்டனர். பிடித்த பாடத்தை படிக்க முடியவில்லை என்றாலும் பட்ட படிப்பு கனவாவது நனவாகும் என்ற எண்ணத்திலிருந்த சத்யாதேவி மிகவும் நொந்து போனார். அவரின், கனவே சிதைந்து போனது. வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் பணமில்லை. பெற்றோரிடத்தில்அதற்கான திராணியும் இல்லை. தற்போது, பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நாள் முழுவதும் மாணவியும் அவரது தாயாரும் மின்சார பிரேக்கர் மூலமாக தார் சாலையை ஒரு மீட்டர் ஆழத்துக்கு குழி தோண்டி கேபிளை பதித்தால் ஒரு மீட்டருக்கு ரூ. 55 சம்பளமாக கிடைக்குமாம்.

இதுகுறித்து மாணவி சத்தியாதேவி கூறும் போது, '' நான் அக்ரி படிக்கனும் என்று ஆசைப்பட்டேன். எங்களுக்கு யாரும் வழிகாட்டாத நிலையில் ஈரோடு கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். பெற்றோர் கடன் வாங்கிதான் சேர்த்தார்கள். ஒரு செமஸ்டர் எழுதிய பின்பு கல்லூரி நிர்வாகம் என்னை போன்று நான்கு மாணவிகளை கல்லூரியை விட்டு நிறுத்தி விட்டது. வாங்கிய கடனை அடைக்க அம்மாவுடன் கேபிள் பதிக்கும் கூலி வேலை செய்து வருகிறேன். சாலையை உடைக்க பயன்படுத்தும் பிரேக்கர் 15 கிலோ எடை இருக்கும். சாலையை உடைக்கிறப்போ பிரேக்கரில் பயங்கர அதிர்வுகள் வரும். இதையெல்லாம் பார்த்தால் அம்மா வாங்கின கடனை அடைக்க முடியாது. ஆனால் , அக்ரி படிக்கனும் அப்படிங்கற என்னோட ஆசை கனவாகவே போய்விட்டது'' என்று கதறி அழுதார் .

மகள் அழுவதை பார்த்து தாயாரும் அழவே, உலக மகளிர் தினத்தில் நாம் கண்ட காட்சி நம்மையும் கடும் வேதனையில் ஆழ்த்தி விட்டது.

இதுகுறித்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஈரோடு கலைக்கல்லூரியில் முதல்வராக இருந்த வெங்கடாசலம் கூறுகையில், எங்கள் கல்லூரியை பொறுத்தவரை நாங்கள் யார் மீதும் எந்த படிப்பையும் திணித்ததில்லை. நீங்கள் சொல்லும் இரண்டு பாடப்பிரிவும் சுயநிதி பிரிவின் கீழ் வருகிறது. மாணவி தரப்பில் தான் எதோ குழப்பம் நடந்து இருக்க வேண்டும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments