மலட்டுத்தன்மை அடையும் 200 ஏக்கர் விவசாய நிலங்கள்... 600 அடிக்கும் கீழே சென்ற நிலத்தடி நீர்.. வேதனையில் விவசாயிகள்

0 2389

தேனியில் கல்குவாரிகளிலிருந்து வெளிவரும் தூசியினால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை அடைந்து தரிசு நிலமாக மாறி வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பச்சை பசேலென பரவி கிடக்கும் வயல் வெளிகள், காய்கனிகளுடன் பூத்துக்கிடக்கும் செடி, கொடிகள், நெடுந்துயர்ந்து காணப்படும் தென்னந்தோப்புகள், அருவிக் கொட்டும் மலைகள்... இவைதான் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கிராமத்தின் பொதுவான கண்ணோட்டம்... ஆனால் தேனி அருகே உள்ள பூதிப்புரம் வாடிப்பட்டி கிராமங்களை சற்று நோக்கினால் நம் கண்ணில் தெரிவதெல்லாம் சாம்பல் தூசுகள் தான்...

இந்த கிராமங்களில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமாக 200 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இந்த விவசாய நிலங்களில் வாழை, கத்தரி, வெண்டை, பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து சிறப்பான முறையில் இவர்கள் விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 3 தனியார் கல்குவாரிகள் உருவாகின. இங்கு சொந்தமாக எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த எம்சாண்ட் தயாரிக்கும் இயந்திரம் மூலம் உருவாகும் தூசி பக்கத்திலுள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்களிலும் அடர்ந்து படர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், அடிக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தும் பலன் இல்லாமல் போகின்றன.

மேலும் பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீர் அனைத்தும் பூமிக்கு அடியில் செல்லாமல் எம்சாண்ட் தூசியின் மூலம் தடுக்கப்படுகிறது. மேலும் தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கத்தரி போன்ற காய்களையும் இந்த தூசி படர்ந்து சூழ்ந்து கொள்கிறது. இதனால் அறுவடை செய்யப்படும் பயிர்கள் அனைத்தையும் கழுவி சுத்தப்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு சுத்தப்படுத்தினால் இயற்கையில் உள்ள காய்கறிகளின் தன்மை மாறி சுவையில்லாமல் போய் விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் கல்குவாரிகள் வருவதற்கு முன்புவரை இப்பகுதியில் சுமார் 200 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது 600 அடி ஆழ்துளை கிணறு அமைத்தாலும் நீர் வருவதில்லை. இளநீர் போல சுவையாக இருந்த நீர் தற்போது சுவையின்றி உவர்ப்புத் தன்மையோடு விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாய நிலத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் பாழாக்கி கொண்டிருக்கிற கல் குவாரிகளை இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இப்பகுதியில் உள்ள கல் குவாரிகளை அகற்றி இப்பகுதியை சுத்தப்படுத்தினால் மட்டுமே மீதம் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க முடியும். இல்லை என்றால் 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மலட்டுத் தன்மை அடைந்து தரிசு நிலமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments