முதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..!

0 4249
முதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ்..!

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அல்லது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆய்வு நடத்தி வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட ஆய்வூர்தியான பெர்சிவரன்ஸ் கடந்த மாதம் செவ்வாயில் தரையிறங்கியது.

இதனையடுத்து செவ்வாயின் தரைப்பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் அந்த ஆய்வூர்தி தனது சக்கரங்களின் தடத்தை படமாக எடுத்து அனுப்பியது. மேலும் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள் மற்றும் பாறைகளையும் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டியது.

இந்நிலையில் பெர்சிவரன்சை அதிகமாக இயக்க கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் முயற்சி மேற்கொண்டதாகவும், இதன் விளைவாக ஆய்வூர்தி 33 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இயக்கப்பட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மேலும் ஆய்வு செய்வதற்கான, சாத்தியமான பாதைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும், ஏற்கனவே அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ஆய்வூர்தியை விட 5 மடங்கு வேகத்தில் பெர்சிவரன்ஸ் இயங்குவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெர்சிவரன்சுடன் அனுப்பி வைக்கப்பட்ட சிறிய ஹெலிகாப்டரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 30 இடங்களில் பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை சேகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments