திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

0 3577
திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில், தொலைநோக்குத் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

திருச்சி சிறுகனூரில், திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், 100 அடி உயரக் கொடிக் கம்பத்தில், மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். .

750 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்ட மைதானத்தில், காலை முதலே, திரளாக கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மாலையில், மேடைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.... பின்னர், சுமார் 1 கிலோ மீட்டர் தூர அளவிற்கான, பிரத்தியேக நடைமேடையில் நடந்து சென்று, தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களின் வாழ்த்து முழக்கங்களை ஏற்றார்....

இந்தக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருச்சி திமுக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு, ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள் என்ற தலைப்பில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பொருளாதாரம், நீர்வளம், வேளாண்மை, கல்வி & சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய 7 தலைப்புகளில் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முத்தாய்ப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி, அரவணைத்துப் பாராட்டிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மக்களை பிளவுபடுத்துபவர்களை தோற்கடிப்போம்‍ என்றும், 100 சதவித ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஸ்டாலின் கூற, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அதை திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்‍.

திமுக பொதுச்செயலளார் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,கனிமொழி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments