"வெற்றிக்காக கடுமையாக உழையுங்கள்" பாஜகவினருக்கு அமித்ஷா அறிவுறுத்தல்.!

0 2643
"வெற்றிக்காக கடுமையாக உழையுங்கள்" பாஜகவினருக்கு அமித்ஷா அறிவுறுத்தல்.!

தமிழ்நாட்டில், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிப்பெற்று, ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில், பாஜக வெற்றிப்பெறும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகர்கோவில் வந்திருந்தார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்த அவருக்கு பாஜகவினர் செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷாவின் வருகையை ஒட்டி, நாகர்கோவில் மற்றும் சுசீந்திரம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலுக்குச் சென்ற அமித்ஷா அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து “வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம்” என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சுசீந்திரத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நாகர்கோவில் வந்த அமித்ஷா, செட்டிப்பாளையத்தில் இருந்து வேப்பமூடு வரை திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். வேப்பமூடுவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், முன்னதாக சிலை அருகே இருந்த பேரிக்கார்டுகளை அகற்றி தொண்டர்களை அருகில் விடும்படி காவல்துறையினரிடம் கூறினார்.

தொடர்ந்து வடசேரி சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, உடுப்பி இண்டர்நேஷனல் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்யவும் அத்துடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments