திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு..!

0 5157
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு என தகவல்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையொப்பமிட்டுள்ளனர்.

image

திமுக கூட்டணியில் நாற்பதுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. இருபது தொகுதிகளையே ஒதுக்க முடியும் என திமுக தெரிவித்தது.

இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, குறைவான தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்க வேண்டாம் என்றும், தனித்தே போட்டியிடலாம் என்றும் ஒருசிலர் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், சட்டமன்றக் கட்சித் தலைவர் ராமசாமி ஆகியோர் சென்றனர். அங்கு காங்கிரசுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்வதற்கான உடன்படிக்கை கையொப்பமானது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அப்போது திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் உடனிருந்தார்.

தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு கையொப்பமானபின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நோக்கம் என்றும், மதச்சார்பின்மை என்கிற தேரை இழுக்க வேண்டும் என்பதால், திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments