வெளிநாட்டில் இருந்து வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0 6513
வெளிநாட்டில் இருந்து வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வெளிநாட்டில் இருந்து வந்த தந்தையை அழைத்து வர விமான நிலையத்திற்கு தாய் சென்றிருக்க, பாட்டியின் பொறுப்பில் விடப்பட்ட 4 வயது சிறுமி தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம் கடலூர் அருகே நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அன்புச்செல்வி என்ற மனைவியும், இருமகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவுக்கு சென்ற ரமேஷ் அங்கு வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் மார்ச் 5ம் தேதி மனைவி மற்றும் குழந்தைகளை காண இந்தியா திரும்பியுள்ளார். மார்ச் 5ம் தேதி மாலை மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ரமேஷை அழைத்து வருவதற்காக அவரது மனைவி அன்புச்செல்வி திருச்சிக்கு சென்றுள்ளார். அப்பொழுது தனது 3 குழந்தைகளையும் தனது அம்மாவின் பொறுப்பில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த ரமேஷின் 4வயது இளைய மகளான ரஞ்சனாஸ்ரீ வீட்டில் இருந்து 10 அடி தொலைவில் இருக்கும் தரைமட்ட கிணற்றிற்கு அருகே சென்றுள்ளார். சில நிமிடங்களில் ரஞ்சனாஸ்ரீயை காணாது உறவினர்கள் தேடிய நிலையில் இரவு 7 மணிக்கு தரைமட்ட கிணற்றில் சிறுமியின் உடல் மிதந்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியின் உடலை மீட்டதுடன் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்கு வந்த ரமேஷ் பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்த நிலையில் குழந்தைகளை பார்ப்பதற்காக ஆசையுடன் வந்தபோது குழந்தை உயிரிழந்த காட்சியும், சடலத்தை பார்த்து தாய், தந்தை கதறி அழுந்ததும் அங்கிருந்தவர்களின் கண்களை ஈரமாக்கியது.

தகவலறிந்து அங்கு விரைந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே ஆபத்தான நிலையில் திறந்தடியாக இருக்கும் தரைமட்ட கிணற்றை மூட அப்பகுதியினர் முயற்சிக்காததும், கவனக்குறைவுமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments