நள்ளிரவில் , தேக்கம்பட்டி வந்து ஜெயமால்யதாவை கட்டிக்கொண்டு அழுத பாகன்கள்... யானை தாக்கப்பட்ட விவகாரத்தில் உருக்கமான தகவல்கள்!

0 8577
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் ஜெயமால்யதா யானை

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் தாக்கியது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த யானையைப் பிரிந்த போது, அந்த பாகன்கள் கண்ணீர் வடித்து துடித்தது பலருக்கும் தெரியாது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்வு முகாமுக்குச் சென்றது. முகாமில் மற்ற யானைகளுடன் சேர்ந்து உற்சாகமாக ஜெயமால்யதா பொழுதைக் கழித்து வந்தது. பவானி ஆற்றில் குளியல் போட்டு ஆனந்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஏதோ தவறு செய்து விட்டதற்காக அதன் பாகன்கள் இரண்டு பேர் ஜெயமால்யதா யானையைத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து , யானையைத் தாக்கிய பாகன்கள் வினில் குமார், உதவி பாகன் பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பிறகு, யானையை சுப்ரமணி என்ற மற்றொரு பாகன் பராமரித்து வந்தார்.

ஆனால், பாகன்கள் மாற்றப்பட்டதால் யானை ஜெயமால்யதா சோகத்திலிருந்து வந்தது. திடீரென்று, முகமறியாதவர்கள் தன்னை பராமரிப்பதை பொதுவாக யானைகள் விரும்பாது. அதனால், மனரீதியாக பாதிக்கப்பட்டு குண நலன்களில் மாற்றம் ஏற்பட்டு விடும். மனிதர்களைத் தாக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், யானையை மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுக்கே திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், புதிய பாகன்களுடன் நீண்ட தொலைவு பயணத்தில் யானையை அனுப்பி வைக்க முடியாது என்பதால், நாங்களே வந்து ஜெயமால்யதாவை ஸ்ரீவில்லிப்புதூர் கோயிலுக்கு அழைத்து வருகிறோம் பழைய பாகன்கள் கேட்டுக் கொண்டனர். கோயில் நிர்வாகம் இதை ஏற்றுக் கொண்டதால், யானையை அடித்த அதே பாகன்கள் தேக்கம்பட்டிக்கு வந்து நள்ளிரவு 2 மணியளவில் ஜெயமால்யதாவை பார்த்தனர்.

சில நாள்கள் தன்னை பராமரித்த பாகன்களை பார்க்காமல் இருந்த ஜெமால்யதா அவர்களைக் குழந்தை போலத் தும்பிக்கையால் கட்டிக் கொண்டது. பாகன்களும் அதன் தும்பிக்கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து, ஜெயமால்யதாவை நீராட்டி அதற்கு உணவு, பசுந்தீவனம், ஊட்டச்சத்து மருந்துகள் ஊட்டினர். பின்னர், பாகன்கள் உதவியுடன் ஜெயமால்யதா ஸ்ரீவில்லிப்புதூர் சென்று சேர்ந்தது. யானைகள் புத்துணர்வு முகாம் ஒரு மண்டலம் அதாவது 48 நாள்கள் நடைபெறும். இந்த புத்துணர்வு முகாமில் பாதியில் ஒரு யானை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது இதுவே முதன்முறை. இதற்கு, யானையின் பாகன்களே ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விட்டதுதான் சோகம்.

ஆண்டாள் கோயிலுக்கு சென்று சேர்ந்த ஜெயமால்யதாவுக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தற்போது, ஜெயமால்யதாவை பாகன்கள் சுப்பிரமணியன், திருப்பதி ஆகியோர் பராமரித்து வருகின்றனர். யானை உற்சாகமான மனநிலையில்தான் உள்ளது. மேலும் யானைக்கு சத்தான உணவுகளை பாகன்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், முகாமிலிருந்து திரும்பிய யானை ஆரோக்கியமாக இருக்கிறதா... அதன் செயல்பாடுகள் எப்படியுள்ளது? புதிய பாகன்கள் யானையை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் யானைக்குப் பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார். பிறகு, சில நாட்களுக்குப் பிறகு யானை கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் என்று மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments