தனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ..! இளம் தொழில் அதிபருக்கு மொட்டை

0 113168
தனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ..! இளம் தொழில் அதிபருக்கு மொட்டை

லொகாண்டோ என்கிற ஆன்லைன் டேட்டிங் இணையதளம் மூலம் பெண்களை பேசவைத்து சென்னை இளம் தொழில் அதிபரிடம் 16 லட்சம் ரூபாயை பறித்த மும்பையை சேர்ந்த ஆபாச வீடியோ தயாரிப்பாளர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வலைதளத்தில் டேட்டிங்கிற்கு பெண் தேடியவர் மோசடி வலையில் சிக்கிக் கொண்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

லொகாண்டோ என்கிற பெயரில் டேட்டிங் இணையதளம் ஒன்று இயங்கி வருகின்றது. இதன் மூலம் பல்வேறு வகையான சேவைகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பெற இயலும்..!

லொகாண்டோவில் ஆண், பெண் டேட்டிங்கிற்கு என்று தனியாக ஒரு குழு உள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த மனிஷ் குப்தா என்ற இளம் தொழில் அதிபர் டேட்டிங்கிற்கு பெண் தேடியுள்ளார். அப்போது அதில் உள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மனிஷ்குப்தா, எதிர் முனையில் பேசிய பெண்ணின் சொக்கவைக்கும் பேச்சில் மயங்கியுள்ளார்.

அந்த பெண்ணுடன் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக்கிய மனிஷ் குப்தாவிடம் அந்த பெண் தான் நேரில் சந்திக்க வருவதாகக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து பணம் கறந்துள்ளார்.

அவரது குரலுக்கும் அந்த பெண் அனுப்பி வைத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் கண்டு மயங்கிய மனிஷ்குப்தா, லட்சங்களை சில்லறையாக அள்ளிக்கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் பெரிய அளவில் வங்கி கணக்கில் இருந்து மாயமானதைக் கண்டு, அவரது வீட்டில் உள்ளவர்கள் விசாரித்தபோது நேரில் சந்திக்காமலேயே ஆன்லைன் டேட்டிங் அழகியிடம் பணத்தை லம்ப்பாக பறிகொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மோசடி குறித்து 2019 ஆண்டு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கு மூலம் அவர்களது இருப்பிடத்தை கண்டறிந்த சைபர் குற்றபிரிவு காவல் உதவி ஆய்வாளர் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று யாஸ்மின் ரோவா கான் என்ற அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்துள்ளார்.

முதலில், பெண்ணின் வீட்டில் ஒரு சிறுமி மட்டும் இருந்த நிலையில் தன்னை தேடி தமிழக போலீஸ் வந்திருப்பதை அறிந்த அந்த பெண், தனது வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடியதாக தமிழக உதவி ஆய்வாளர் மீது உள்ளூர் போலீசில் புகார் அளித்து சிக்கவைத்தார். பின்னர் ஒரு வழியாக அந்த பெண்ணை விட்டுவிட்டு தனியாளாக உதவி ஆய்வாளர் தமிழகம் திரும்பும் நிலை ஏற்பட்டது.

10 க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கித்தருவதாக அழைத்து வந்து முகமூடி அணிந்து ஆபாச வீடியோக்களில் நடிக்க வைத்த வழக்கில் தொடர்புடைய கணவன், மனைவி இருவரையும் மும்பை சிறையில் வைத்து கைது செய்த தமிழக தனிப்படை போலீசார் அவர்களை சென்னை அழைத்து வந்தனர்.

மனிஷ் குப்தா போல சபலபுத்திக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் பணத்தை பறிகொடுத்தாலும், அவமானத்திற்கு பயந்து புகார் அளிக்கவில்லை என்பதை இந்த ஆபாச வீடியோ ஜோடி தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது..!

அதே நேரத்தில் தனிமையை இனிமையாக்க எண்ணி இது போன்ற வலைதளங்களில் பெண்களுக்கு வலை விரித்தால் முடிவில் அது சம்பந்தப்பட்டவர்களை மோசடிக் குழிக்குள் தள்ளிவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments