இளமையும் போச்சு... வயசும் போச்சு...! பாலியல் வழக்கில் 20 வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை..!

0 48826

ரு பெண் தவறாகக் கூறிய பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, 20 வருடங்களை சிறையிலேயே கழித்த அப்பாவி நபரை விடுதலை செய்துள்ளது அலஹாபாத் உயர் நீதிமன்றம்.

‘ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான், நம் நாட்டின் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, நீதி பரிபாலனம் நடைபெற்று வருகிறது. அப்படியிருந்தும், உத்தரப் பிரதேசத்தில், தவறான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஒருவர் தன் வாழ்க்கையையே சிறைச்சாலையில் தொலைத்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லலிட்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு திவாரி. 20 வருடங்களுக்கு முன்பு, அவரது 23 - ம் வயதில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வயல் வெளியில் வேலை பார்த்துவிட்டுத் திரும்பி வந்த போது, விஷ்ணு திவாரி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்று ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விஷ்ணு திவாரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 10 ஆண்டு கடுங்காவல் மற்றும் எஸ்.சி/எஸ்டி வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் தண்டனை விதிக்கப்பட்டது. 20 வருடங்கள் சிறை வாசத்தை அனுபவித்தார் விஷ்ணு திவாரி.

இந்த நிலையில் தான், மேல் முறையீட்டு வழக்கில், அலஹாபாத் நீதிமன்றம் விஷ்ணு திவாரி குற்றமற்றவர் என்று விடுதலை செய்துள்ளது. அந்தத் தீர்ப்பில், “குற்றம் சுமத்திய பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு, மருத்துவ அறிக்கையில் குறைந்தபட்ச அடையாளங்கள் கூட எதுவும் இல்லை. அரசு தரப்பு வாதங்கள் மற்றும் சாட்சிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை விஷ்ணு திவாரி கீழே தள்ளியதாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்த பெண்ணின் மீது காயம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் மருத்துவக் குறிப்பில் இல்லை. மருத்துவர்களும் பலாத்காரம் நடக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிக்கையில் கூறியுள்ளனர். விஷ்ணு திவாரிக்கு எதிரான மூன்று சாட்சியங்களையும் குறுக்கு விசாரணை செய்தபோது அவர்கள் கூறிய பதிலில் முரண்பாடுகள் இருக்கின்றன. அதனால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது தவறுதலாகக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “இவரது கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனையைக் குறைக்க வாய்ப்பிருந்தும் மாநில அரசு குறைக்கவில்லை. அது எங்களுக்கு வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று தீர்ப்பு வந்தாலும், அதைக் கொண்டாடமுடியாத மனநிலையில் இருக்கிறார் விஷ்ணு திவாரி. அதற்குக் காரணம் அவர் தனது இளமைப் பருவம் முழுவதையும் சிறையில் கழித்துள்ளதுதான்.

இது குறித்து விஷ்ணு திவாரி, “எனக்குத் திருமணம் ஆகவில்லை. ஜெயில் வாழ்க்கை என்னை நோகடித்துவிட்டது. ஜெயில் சமையலறையில் வேலை செய்த போது கொதிக்கும் எண்ணெய் பட்டு கை எல்லாம் கொப்புளங்களாக இருக்கின்றன. சிறையில் வேலை செய்ததற்காக 600 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். என் கையில் இப்போது இதுதான் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?” என்று வேதனையுடன் கூறியுள்ளார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments