இராமதாஸ் ஆவேசம்.! வசைபாடல்.! சலசலப்பு.!
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு? குறித்தும், அதற்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றியும் கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு நேரடியாக பதிலளிக்காமல், ஒருமையிலும், தரக்குறைவாகவும், பாமக நிறுவனர் இராமதாஸ் ஆவேசம் காட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர், பாமக நிறுவனர் டாக்டர் இராமதாசும், இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, செய்தியாளர் ஒருவர், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக, வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி கூறி வரும் தகவல்களை மேற்கோள்காட்டி இராமதாசிடம் கேள்வி எழுப்பினார்.
கேள்வியை எதிர்கொண்டாலும் அதற்கு இராமதாஸ் பதில் கூறாது மவுனம் காக்க, அப்போது குறுக்கிட்ட அன்புமணி, பாமகவின் 40 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாக, உள் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறினார். எனவே, யாரோ கூறுவதை கேட்டு, பாமகவின் தொடர் போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என, கேட்டுக் கொண்டார்.
அப்போது, திடீரென குறுக்கிட்ட பாமக நிறுவனர் இராமதாஸ், யாரோ ஒருவர் கூறுவதை வைத்து கேள்வி கேட்க வெட்கமாக இல்லையா என செய்தியாளர் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பியதோடு, ஒருமையிலும் தாறுமாறாக வசைபாடியதால், சலசலப்பு ஏற்பட்டது...
நிலைமையின் சூழலை புரிந்துகொண்ட அன்புமணி, உடனடியாக சுதாரித்து, மைக்குகளை ஆப் செய்துவிட்டு, தனது தந்தையை அழைத்துச் சென்றுவிட்டார். பின்னர், செய்தியாளரை நோக்கிப் பாய்ந்து வந்த பாமக நிர்வாகி ஒருவர், ஒன்-டூ-ஒன் பேசலாமா என்றார். மேலும், கடந்தமுறை மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம் பால், செய்தியாளரிடம் ஆவேசம் காட்டினார்.
உடனடியாக அங்கு வந்த பாமக மூத்த தலைவர்கள், இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Comments