”திமுகவிடம் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் கூட்டணியை உறுதி செய்வோம்” - கே.எஸ்.அழகிரி

0 3850
”திமுகவிடம் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் கூட்டணியை உறுதி செய்வோம்” - கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் 30 தொகுதிகளாவது பெற வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், தன்மானத்தை விட்டுத்தராமல் தொகுதிகள் கேட்டுப் பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடிக்கிறது. திமுக தரப்பில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்தை அறிவதற்காக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேர்தல் பொறுப்பாளர்கள் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் 41 தொகுதிகள் கேட்டுப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கட்சி நிர்வாகிகள் பேசி கலைந்து போகச் செய்தனர். இந்த கூட்டத்தில் வேறு கூட்டணிக்கு மாற வேண்டாம் என்றும், திமுக கூட்டணியில் 30 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்டுப் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள 3 தொகுதிகளின் பட்டியலை நிர்வாகிகளிடம் கேட்டு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் தருவதாக கூறப்படும் நிலையில், இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் 27 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை எம்பி சீட் கேட்டுப்பெற முடியும் என்று அழகிரி நம்பிக்கை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய கேஎஸ் அழகிரி, கணவன் - மனைவி உறவு கூட இத்தனை ஆண்டுகாலம் அடங்கி, ஒடுங்கி இருக்கமாட்டார்கள், அந்த அளவு திமுகவுடன் இணக்கமாக செல்கிறோம் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் குறைவான தொகுதிகளையே தற்போது ஒதுக்க முன்வருவதாகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலமே காங்கிரசிடம் பேசி வருகிறார்கள் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்மானத்தை விட்டுத்தாராமல் தொகுதிகள் கேட்டுப் பெறப்படும், தலைமை என்ன முடிவு எடுத்தாலும், தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேஎஸ் அழகிரி உணர்ச்சிகரமான முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்குப பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, விரைவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடியும், ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments