சாமியப்பனின் சாணக்கியத்தனம்... வியந்து போய் சைக்கிள் பரிசளித்த திருச்சி கமிஷனர்!
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அந்த பழமொழிக்கு உதாரணமாக திகழ்ந்த திருச்சி சிறுவனுக்கு அந்த நகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் புத்தம் புது சைக்கிள் பரிசளித்து வெகுவாக பாராட்டினார்.
திருச்சி மாநகரில் தேர்தல் பணிக்காக வந்துள்ள மத்திய காவல் படையினர் மற்றும் மாநகர காவலர்கள் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி பல இடங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கொடி அணிவகுப்பு புத்தூர் சாலையில் நடந்து கொண்டிருந்ததது. அப்போது, சிறுவன் ஒருவன் தலைக்கவசம் அணிந்து கொண்டு பழைய சைக்கிளில் அணிவகுப்பை கடந்து சென்றான்.
மோட்டார் சைக்கிளில் செல்லும் பலர் தலையில் ஹெல்மட் அணிவதில்லை . அபாராதம் விதித்தாலும் மீண்டும் மீண்டும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் , சிறுவன் ஹெல்மெட் அணிந்து சைக்கிளில் சென்றது காவல்துறை அதிகாரிகளை கவர்ந்தது . சிறுவனை நிறுத்திய காவல் துறை அதிகாரி நிறுத்தி அவனுடன் உரையாடினார். மல்லிகைபுரத்தை சேர்ந்த ஏலப்பன் மற்றும் கலையரசி தம்பதியின் மகன் என்றும் தன் பெயர் சாமியப்பன் என்றும் 6 ஆம் வகுப்பு படிப்பதாகவும் தனது தாயார் நடத்தும் பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்கி செல்வதாகவும் சிறுவன் கூறியுள்ளான்.
சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துள்ளாயே? என்று அந்த அதிகாரி கேள்வி கேட்ட போது,'' தலைக்கவசம் அணிவது நமக்கு பாதுகாப்பு, விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் என்று கேள்விப்பட்டேன் . அதனால்தான் எப்போது மிதிவண்டி ஓட்டினாலும் தலைக்கவசம் அணிந்தே ஓட்டுவேன் ' என்று பெரிய மனுஷன் போல சாமியப்பன் பதிலளித்தான். சிறுவனின் சாணக்கியத்தனமாக பதில் சொல்வதை பக்கத்தில் இருந்த மற்றோரு அதிகாரி வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் பதிவிட அது வைரலானது.
சாமியப்பன் குறித்த தகவல் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனை எட்டியது. இதையடுத்து, சிறுவனை மெச்சிய கமிஷனர் லோநாதன் அவனையும் பெற்றோரையும் மார்ச் 4 ஆம் தேதி தன் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தார். அங்கே, சிறுவனுக்கு ஒரு புத்தம் புதிய சைக்கிள் தயாராக இருந்தது. மார்ச் 4 ஆம் தேதி சாமியப்பனுக்கு பிறந்தநாள் என்பதால் ஆணையர் அலுவலகத்திலேயே கேக் வெட்டி சிறுவனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறகு, அவனுக்கு பிறந்த நாள் பரிசாக புத்தம் புதிய சைக்கிளை கமிஷனர் லோகநாதன் வழங்கினார். பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டாகவும் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிறுவன் செயல்பட்டதால் சாமியப்பனுக்கு "நற்கருணை வீரன்" என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது.
சாமியப்பன் குறித்து பெற்றோர் கூறுகையில், '' தங்களிடம் அடம்பிடித்து தலைக்கவசம் வாங்கி அணிந்து கொண்டதான் என்றும் தங்கள் மகனை கமிஷனர் பாராட்டி பிறந்த நாள் கொண்டாடி சைக்கிள் பரிசளித்தது தங்களை நெகிழ செய்ததாகவும் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.
Comments