தொகுதி பங்கீடு அதிமுக தீவிரம்..!

0 1058
தொகுதி பங்கீடு அதிமுக தீவிரம்..!

அதிமுக தனது தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

பா.ஜ.க.வுக்கு 24 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், எந்தெந்த தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை கேட்டுப் பெற பா.ஜ.க. முனைப்பு காட்டி வரும் நிலையில், அதே தொகுதிகளில் அதிமுகவுக்கும் செல்வாக்கு இருப்பதால் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அதிமுக - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், வருகிற 7-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிகவுக்கு 15 சட்டமன்ற தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடமும் தர அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், சுமார் 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தேமுதிக அதிமுகவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விருகம்பாக்கம், எழும்பூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், ஈரோடு கிழக்கு, சூலூர், ஆம்பூர், ராணிப்பேட்டை, ராதாபுரம், சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, விருதுநகர், விருத்தாசலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 20 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை தேமுதிக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுடனான தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னரே தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை மீண்டும் அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments