6 தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் - திருமாவளவன்

0 4888
6 தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் - திருமாவளவன்

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், பொதுத்தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யப்பட்டவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2 பொதுத்தொகுதிகள், 5 தனித் தொகுதிகள் என 7 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் காலையில் கூறப்பட்டது. ஆனால், 6 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், உடன்பாட்டை இறுதி செய்வதற்காக, கட்சி அலுவலகத்தில் இருந்து, திருமாவளவன் புறப்பட்டபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 6 தொகுதிகள் என்பதை ஏற்கக் கூடாது என முழக்கமிட்டனர். அவர்களை திருமாவளவன் சமாதானப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 6 தொகுதிகள் என்பது குறைந்த எண்ணிக்கை என கட்சிக்குள் அதிருப்தி இருந்தபோதிலும், மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக, திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதாகத் தெரிவித்தார்.

6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் சுயேச்சை சின்னத்தில் வி.சி.க. வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என அவர் கூறினார். 6 தொகுதிகளில், பொதுத்தொகுதி ஏதேனும் ஒதுக்கப்படுமா என இன்னும் முடிவாகவில்லை என்றும் திருமாவளவன் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments