காதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்..! 20 ஐ இழுத்துச் சென்ற 30

0 183019
காதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்..! 20 ஐ இழுத்துச் சென்ற 30

விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவன் மீது கொண்ட காதலால், இரண்டு குழந்தைகளின் தாய், மது போதையில் வீட்டில் தூங்கிய காதல் கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் காதல் கண்ணை மறைத்ததால் பெண் செய்த விபரீத செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால். ஓட்டுனராக வேலை பார்த்து வந்த இவர், தங்கள் பகுதியை சேர்ந்த சுசித்தா மேரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமண தம்பதிகள் இருவரும் சென்னையில் தங்கி வேலைபார்த்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை பறிபோனதால், 2 குழந்தைகளுடன் பிழைப்புக்காக சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர்.

ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும், தனது மனைவி குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு, லியொ பால் மட்டும் சென்னைக்கு திரும்பி உள்ளார். 6 மாதமாக இங்கு இருந்து ஓட்டுனர் வேலையுடன் உடலில் பச்சை குத்தும் பயிற்சியை எடுத்து வந்துள்ளார் லியோ பால்.

இந்த நிலையில் புதுச்சேரியில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லியோ பாலை காணவில்லை என்று அவரது மனைவி சுசித்தா மேரி, அவரது மாமனார் சகாயராஜூக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் கூலி வேலை பார்த்து வந்த சகாயராஜ், மருமகளை விக்கிரவாண்டி காவல் நிலையம் வரச்சொல்லி புறப்பட்டுச்சென்றுள்ளார்.

ஆனால் மருமகள் சுசித்தா மேரி சொன்னபடி அங்கு வரவில்லை. வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரது இரு குழந்தைகளும் தாயை காணாமல் தவித்துக் கொண்டிருந்தது. அம்மா தங்கள் விட்டுச்சென்று விட்டதாக தாத்தாவிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. வீட்டின் பின் பக்கத்தில் குழிதோண்டி எதையோ புதைத்தது போன்ற தடயங்கள் காணப்பட்டது.

இதையடுத்து சகாயராஜ், தனது மகன் லியோ பாலை காணவில்லை என்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமான மருமகள் சுசித்தா மேரி மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் துறையினர் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமான இடத்தை தோண்டிய போது தலை மற்றும் கழுத்தில் காயங்களுடன் புதைக்கப்பட்டிருந்த லியோ பாலின் சடலம் அழுகி நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டாரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புள்ளீங்கோ காதல் விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது.

குடும்பத்தை காப்பாற்ற காதல் கணவன் லியோ பால் வேலை தேடி பட்டணம் சென்ற நிலையில், பக்கத்து வீட்டில் பந்தாவாக புள்ளீங்கோ ஹேர் ஸ்டைலில் சுற்றிவந்த கல்லூரி மாணவன் ராக்கி என்கிற ராதாகிருஷ்ணன், சுசித்தாமேரியை கவர்ந்ததாக கூறப்படுகின்றது.

கல்லூரி மாணவனை கலாபக் காதலானாக மாற்றிய சுசித்தாமேரி அவருடன் சுற்றி வந்ததாக கூறப்படுகின்றது. மீண்டும் லியோ பால் ஊருக்கு திரும்பியதால் இருவரும் சந்திக்க இயலாமல் தவித்துள்ளனர். இரண்டாம் காதலுக்கு இடையூறாக இருக்கும் முதல் காதல் கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன் படி கடந்த மாதம் 4ஆம் தேதி இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து படுத்து உறங்கிய லியோபாலின் தலையில் இரும்பு ராடால் அடித்தும், கழுத்தை அறுத்தும் இருவரும் சேர்ந்து கொலை செய்து சடலத்தை வீட்டுக்கு பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். ஊராரிடம் கணவர் புதுச்சேரிக்கு திருமணத்துக்கு சென்றிருப்பதாக கதை அளந்து விட்டுள்ளார்.

இந்த நிலையில் தங்கள் இருவர் மீதும் ஊராருக்கு சந்தேகம் எழ தொடங்கிய நிலையில் 21 ந்தேதி குழந்தைகளை தவிக்க விட்ட 30 வயதான சுசித்தாமேரி, 20 வயதேயான புள்ளீங்கோ காதலன் ராக்கியுடன் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தாயின் விபரீத காதல் ஆசையால் தந்தையை இழந்து தாயை பிரிந்து இரு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தவறான உடல் சார்ந்த தேடல் குடும்பத்தில் என்ன மாதிரியான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments