’ஹிட்லர் மீசையவே லோகோவா வைக்கிறீங்களா?’- பதறியடித்து லோகோவை மாற்றிய அமேசான்..!

அமேசான் நிறுவனத்தின் லோகோ, ஹிட்லர் மீசையைப் போல உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்த நிலையில், அமேசான் நிறுவனம் தனது லோகோவை மாற்றி வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
ஈ - காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கொடிகட்டிப் பறக்கிறது, அமேசான் நிறுவனம். அமேசான் நிறுவனம், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பயன்படுத்தும் அமேசான் செயலியின் லோகோவை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜனவரி மாதம் மாற்றியது. மிகப் பெரிய மாற்றங்கள் இன்றி சத்தமில்லாமல் மாற்றப்பட்ட இந்த லோகோ சர்ச்சையைக் கிளப்பியது.
வழக்கமான ஸ்மைலி சிம்பலுக்கு மேல், வெட்டிய ரிப்பன் ஒன்றை ஒட்டி வைத்தது போல ஒரு லோகோவை அறிமுகம் செய்திருந்தது அமேசான். ஆனால், அந்த ரிப்பனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஹிட்லர் மீசையை ஞாபகப் படுத்துவதாகப் பதிவிட்டனர். பலரும் அந்த லோகோவை, ஹிட்லர் மீசை என்று கிண்டல் அடித்தனர். இதையடுத்து அமேசான் நிறுவனம் பதறியடித்துக்கொண்டு தனது லோகோவை மாற்றி அமைத்து வெளியிட்டுள்ளது.
இது குறித்து அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ஷாப்பிங் செய்யும் போது அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தூண்டும் விதத்தில் புதிய லோகோவை வடிவமைத்துள்ளோம். அமேசான் நிறுவனத்தின் பார்சல்களை அவர்கள் பார்க்கும் போது இந்த லோகோ அவர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தைக் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், புது லோகோவையும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். the last airbender திரைப்படத்தில் வரும் அவதாரின் நெற்றியில் உள்ள அம்புகுறியைப் போலவே, அமேசான் நிறுவத்தின் புதிய லோகோ இருப்பதாக கமெண்ட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனத்தைப் போலவே மிந்த்ரா நிறுவனமும் சமீபத்தில் லோகோ சர்ச்சையில் சிக்கி, தனது லோகோவை மாற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது...
Comments