கழுத்தில் ஸ்டெதஸ்கோப், மருத்துவமனை கேண்டீனில் லஞ்ச்... நோயாளிகளிடம் வசூல்! - இரண்டு நாள் டாக்டர் கைது

0 8953
போலி டாக்டர் சாரங்கன்

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து நோயாளிகளிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞரை கைது செய்த போலீசார்  இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற இளைஞன் ஒருவன், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது அணியும் நீல நிற உடையை அணிந்துகொண்டு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்துள்ளான் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு போலி அடையாள அட்டையையும் அணிந்து நடமாடி வந்துள்ளான். இந்த அடையாள அட்டையை காட்டி மருத்துவமனை கேண்டீனிலும் இரண்டு நாள்களாக உணவும் சாப்பிட்டு வந்துள்ளான். இன்று காலை தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்டு நோயாளிகளை மிரட்டி பணம் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தர மறுத்த நோயாளிகளை தகாத வார்த்தைகளால் திட்டவும் செய்துள்ளான்.

பேச்சு வழக்கு மற்றும் உடல் மொழியை பார்த்தால் மருத்துவர் போலவே தெரியவில்லை. காதில் கடுக்கண் வேறு அணிந்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், சந்தேகமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர் அவனை பிடித்தனர். பின்னர், பந்தய சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மருத்துவர் வேடத்தில் இருந்த இளைஞனை விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இளைஞன் சென்னை, வியாசர்பாடி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சாரங்கன் என்பதும், சென்னை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. கோவையில் சிவானந்தா காலனியில் திருநங்கைகளுடன் சாரங்கன் தங்கியிருந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். இந்த நிலையில், மருத்துவமனையில் டாக்டர் வேடத்தில் சென்று பணம் வசூலிக்க திட்டமிட்டு பிடிபட்டுள்ளான்.  சாரங்கனிடத்திலிருந்து ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றனர்.

அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர் உடை அணிந்து கொண்டு நோயாளிகளிடத்தில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் பிடிபட்ட சம்பவம் மருத்துவமனை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளையே காட்டுவதாக நோயாளிகளும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments