திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் கடந்த பல தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகளை விட அதிகமான இடங்களை, திமுக கூட்டணியில் கேட்டதாகவும், திமுக அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து சென்ற நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், மதசார்பற்ற கூட்டணி நிச்சயமாக தொடரும் என்றும், விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில துணை செயலாளர்கள் வீரபாண்டியன், சுப்புராயன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு குறித்து திமுகவின் டி.ஆர்.பாலு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்புராயன், முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது எனவும், மீண்டும் நாளை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் கூறினார்.
Comments