குடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ஏமாந்த நடத்துனர்

0 17927
குடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ஏமாந்த நடத்துனர்

நாகையில் குடும்ப நண்பர்கள் போல பழகி, ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துனரிடம் 45 லட்ச ரூபாய், 45 சவரன் நகையை சுருட்டிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். போலியான அரசு முத்திரை, போலியான அரசு ஆவணங்கள், போலியான அரசு அதிகாரிகள் என புகுந்து விளையாடிய கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நாகை பால்பண்ணைச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துனர் சுப்பிரமணியன், அதே பகுதியில் விநாயகர் கோவில் ஒன்றை எழுப்பி, பராமரித்து வருகிறார். அந்தக் கோவிலுக்கு அடிக்கடி வந்து சென்ற ராமகிருஷ்ணன் என்பவர் சுப்பிரமணியத்துடன் பழக்கமாகி குடும்ப நண்பர் போல மாறியுள்ளார். தனது மகள் ராஜேஸ்வரி ஓ.என்.ஜி.சியில் பெரிய பொறுப்பில் இருப்பதாகக் கதை அளந்து சுப்பிரமணியத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ராமகிருஷ்ணன். நெருங்கிய உறவுகள் போலப் பழகிய ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் தங்களது துக்கம், சந்தோஷம் என எல்லாவற்றையும் பகிர்ந்த சுப்பிரமணியன், தாம் ஓய்வுபெற்றபோது பெற்ற செட்டில்மெண்ட் பணம் 23 லட்ச ரூபாய் இருப்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவரிடம் பரம்பரை நகைகள் இருப்பதையும் ராமகிருஷ்ணனின் குடும்பம் மோப்பம் பிடித்துள்ளது.

அவற்றை அபகரிக்க முடிவு செய்த அந்தக் கும்பல், தங்களுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகவும், வருமான வரித்துறை வசம் அந்தப் பணம் இருப்பதாகவும், அதனை மீட்க 45 லட்சம் தேவைப் படுவதாகவும் சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளனர். அதனை நம்பவைக்க, தனது நண்பர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடிக்க வைத்தும், போலி அரசு முத்திரை, போலி ஆவணங்களையும் காண்பித்துள்ளனர். அவர்களின் அலங்கார பேச்சில் விழுந்த சுப்பிரமணியம், தன்னிடம் இருந்த பணத்தோடு, ஏராளமானோரிடம் கடன் வாங்கி மொத்தமாக 45 லட்ச ரூபாயும், 45 சவரன் மதிப்புள்ள பரம்பரை நகைகளையும் கொடுத்ததாகக் கூறுகிறார். இந்தப் பணம் 7 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் என பல கட்டங்களாக கைமாறி இருக்கிறது.

எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்ட ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி கும்பல் அதன்பின்னர் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளனர். புகாரின் பேரில் ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்த ஆசாமிகள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். போலி அரசு முத்திரை, போலி அரசு ஆவணங்கள், போலி அடையாள அட்டை என பயன்படுத்தியுள்ளதால், இந்தக் கும்பலுக்கு பெரிய அளவில் குற்றப்பின்னணி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

பல ஆண்டுகால உழைப்பிற்கு அரசு கொடுத்த பணம், பரம்பரை நகைகள் ஆகியவற்றை இழந்ததோடு, ஏராளமான நண்பர்களிடம் வாங்கிய கடன்களும் சுப்பிரமணியத்தை நெருக்கத் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments