அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு.. அமித் ஷா & இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை.!

0 6505

அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே அமித் ஷா முன்னிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் பங்கேற்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமான சனிக்கிழமை தமிழகம் வந்தார். தொடர்ந்து புதுச்சேரி சென்ற அவர், அங்கு பாஜக மையக்குழு கூட்டத்திலும், காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதனையடுத்து விழுப்புரம் வந்த அமித்ஷா, அங்கு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அவர், பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து சென்னைக்கு சாலை வழியாக வந்த அமித்ஷா, வழியில் மதுராந்தகத்தில் உணவகத்தில் உணவருந்தினார்.

பின்னர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குத் திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் வி.கே. சிங், கிஷன் ரெட்டி, தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழகப் பொறுப்பாளர் சி.டி ரவி, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து இரவு 10 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் ஆகியோர் அமித்ஷாவை நேரில் சந்தித்தனர்.

இதனையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. இரவு 10 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு ஒரு மணி வரை நீட்டித்தது. இறுதியில் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அமித்ஷா தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில் விமான நிலையம் சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments