தொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்

0 3817
அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னளவில் குறையாகவே உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னளவில் குறையாகவே உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், "மனதின் குரல்" என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் உரையாற்றி வருகிறார்.

இந்த வகையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சுயசார்பு இந்தியா திட்டம் என்பது, வெறும் மத்திய பாஜக அரசின் திட்டம் அல்ல என்றும், அது இந்தியா தேசத்தின் உணர்வு என்றும், ஆன்மா என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், தண்ணீர் சேமிப்பில் உள்ள பொறுப்பை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்திருப்பதாக, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மழை நீர் சேகரிப்பை உத்வேகப்படுத்தும் நோக்கில் பிரச்சாரத் திட்டம் ஒன்றை ஜல்சக்தி அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என மோடி தெரிவித்தார். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும் என பிரதமர் குறிப்பிட்டார்.

தேசிய அறிவியல் தினம், சர் சி.வி.ராமன் கண்டறிந்த "ராமன் விளைவு" கண்டுபிடிப்பிற்கு அர்ப்பணிக்கப்படுவதாக கூறினார். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அறிவியலின் வளர்ச்சி பற்றி, இளைய தலைமுறையினர் நிறைய படிக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தினார்.

வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக பிரதமராகவும், முதலமைச்சராகவும் இருந்த தங்களுக்கு எதையாவது இழந்து விட்டோம் என்ற எண்ணம் உள்ளதா? என நேயர் ஒருவர் மன் கி பாத்  உரையின் போது மோடியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோடி, உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்றார். அத்தகைய பெருமைமிக்க, அழகிய மொழியான தமிழ் மொழியை கற்க முடியாதது, தன்னளவில் குறையாகவே உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். 

தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவலையடைந்தவர்களாக இருக்க கூடாது, சிரித்த முகத்துடன், முக மலர்ச்சியுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments