பைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்..! 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..!

0 14107
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 6 பேர் பயணித்த இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ஒரு வயது உட்பட 3 குழந்தைகளுடன் 6 பேர் பயணித்த இருசக்கர வாகனம் நிலைக்குலைந்து எதிரே அதிவேகமாக வந்த கார் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம் பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் - தனம் தம்பதியினருக்கு சக்திவேல், பச்சையம்மாள், பரமேஸ்வரி மற்றும் பார்வதி என 4 பிள்ளைகள் இருந்துள்ளனர். தனம் தனது மகன் சக்திவேலுடன், மகள் பரமேஸ்வரி மற்றும் பேரக்குழந்தைகளான 2வயது நந்திதா, 3வயது செம்மிளா மற்றும் ஒருவயதுடைய தமிழ் ஆகியோருடன் மற்றொரு மகள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கொளப்பாடி கிராமத்தில் இருந்து வேப்பூர் நோக்கி 6 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

இருசக்கர வாகனம் இச்சிலிக்குட்டை பகுதி வழியாக வந்துக் கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக காரும் வந்துள்ளது. இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் வந்துக் கொண்டிருக்க அதிக பாரத்தை ஏற்றி சென்ற இருசக்கர வாகனத்தை சக்திவேலால் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய கணநேரத்தில் அந்த கோர சம்பவம் நிகழ்ந்தது.

இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சாலையின் பக்கம் தனம், அவரது மகள், மகன் மற்றும் பேரக்குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் தனத்தின் மகள் பரமேஸ்வரியும், குழந்தைகள் நந்திதா, செம்மிளா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் பலத்த காயமடைந்த சக்திவேல் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இவர்களுடன் சென்ற ஒருவயது குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்படுத்திய காரும் நிலைக்குலைந்து சாலையின் ஓரம் கவிழ்ந்து கிடக்க அதில் பயணித்தவர்கள் காயங்களுடன் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் காரில் பயணித்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய இருசக்கர வாகனத்தில் கைக்குழந்தை உட்பட 6 பேர் பயணித்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை உதாரணமாக கூறும் காவல்துறையினர், இருசக்கர வாகனத்தில் அதிக நபர்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments