"என் வீடு, என் தோட்டம்" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..!

0 2604
"என் வீடு, என் தோட்டம்" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..!

புதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வயதான ”இளைஞர்” ஒருவர்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் நைனார்மண்டபம் வண்ணாரத் தெருவுக்குச் சென்றால் தனித்துத் தெரிகிறது புரூரவனின் வீடு. காங்கிரீட் காடுகளாகி வரும் நகர்புறத்தில், தோட்டப் பயிர்களை வளர்ப்பது என்பது பலருக்கு கனவாக இருந்து வரும் நிலையில், மாடித் தோட்ட விவசாயம் அவர்களுக்கு ஓரளவுக்குக் கை கொடுக்கிறது.

அந்த மாடித் தோட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட புரூரவனுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குடியிருந்த வீடு சரியாக கை கொடுக்கவில்லை.

மாடித் தோட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த எண்ணிய புரூரவன், சொந்தமாக இடம் வாங்கி, இந்த வீட்டை அதற்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார். 20க்கு 60 அளவுள்ள மாடியில் தண்ணீர் உள்ளே இறங்காதவாறு புரோக்கன் டைல்களை பதித்து, அரை அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி, குட்டி வயலாகவே மாற்றியுள்ளார் புரூரவன். கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், முருங்கை என காய்கறி வகைகள், சாமந்தி, சீத்தா பழம், வாட்டர் ஆப்பிள், பார்பேடா செர்ரி, மினி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை எனப் பழ வகைகள், வெற்றிலை, விங்டு பீன்ஸ், சுரை, குடல், பாகல் என கொடி வகைகள் என அடர்த்தியான விவசாயக் காட்டை உருவாக்கி வைத்திருக்கிறார் புரூரவன்.

குறிப்பாக வெங்கேரி, உஜாலா, ஒடிசா உள்ளிட்ட 10 அரிதான கத்தரிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இது அத்தனைக்கும் 100 விழுக்காடு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறும் அவர், பழுதடைந்த வாஷிங் மெஷினை காய்கறிக் கழிவுகளை மட்கச் செய்வதற்கான கலனாக பயன்படுத்துகிறார்.

கணவன், மனைவி, மூன்று மகன்கள், அவர்களது மனைவிகள், பேரப்பிள்ளைகள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் புரூரவனுக்கு இந்த மாடித் தோட்டத்தில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் அனைத்தும் போதுமானதாக இருக்கிறது. தங்களது தேவைக்குப் போக கிடைப்பவற்றை, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துவிடுவதாக அவர் கூறுகிறார்.

புதுச்சேரி அரசின் வேளாண் துறை நடத்தும் மலர் கண்காட்சியில் மாடித்தோட்டம் பிரிவில் இதுவரை 6 முறை முதல் பரிசை வென்றுள்ள புரூரவன், மாடித் தோட்டம் தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுவோர் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments