சென்னையில் மீண்டும் ஒருநாள்..! மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந்திறங்கிய இதயம்..!
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு , ஐந்தே நிமிடங்களில் குரோம்பேட் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயதான பெண் ஒருவர் இதயக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் சிவகங்கையை சேர்ந்த 21 வயதான தமிழ்மணி என்ற இளைஞர் பிப்ரவரி 23ம் தேதி நண்பரின் திருமண நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக காரில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். படுகாயமடைந்த தமிழ்மணி மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ்மணி பிப்ரவரி 25 ஆம் தேதி மூளை சாவு அடைந்தார்.
தமிழ்மணி ரத்த தானம் அளிப்பது உள்ளிட்ட சமூக பணிகளை செய்து வந்த நிலையில் அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அதேவேளையில் குரோம்பேட்டையில் அனுமதிக்கப்பட்ட பெண் இதயக்கோளாறால் உயிருக்கு போராடியதால் தமிழ்மணியின் இதயத்தை மாற்றியமைக்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து உடனடியாக வேலம்மாள் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு இதயத்தை எடுத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் உரிய பாதுகாப்புடன் இதயம் எடுத்து வரப்பட்டது. வழக்கமாக மதுரையில் இருந்து 10.45 மணிக்கு புறப்பட்டால் சென்னையை 12.25க்கு விமானம் அடையும். ஆனால், இதயமாற்று அறுவை சிகிச்சை காரணமாக 45 நிமிடங்களில் சென்னை விமான நிலையத்திற்கு இதயத்துடன் விமானம் வந்திறங்கியது.
அங்கிருந்து துரிதமாக ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்பட்ட இதயம் உரிய பாதுகாப்புடன் 5 நிமிடங்களில் குரோம்பேட்டை மருத்துவமனையை அடைந்தது. அங்கு தயாராக இருந்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தினர்.
Comments